இலக்கிய வட்டத்தில் சிறகடிக்கும் 11-ம் வகுப்பு மாணவி; ஏழாவது புத்தக வெளியீட்டை எதிர்நோக்கும் சூடாமணி! | Inspiring interview with book author Soodamani, who wrote 6 books at a very young age

Spread the love

எழுத்துப் பணி பற்றி?

என்னுடைய முதல் நூல் “அம்மாவைத் தேடி’ என்கின்ற 12 கதைகள் சேர்ந்த சிறுகதை தொகுப்பு. அப்புத்தகத்தை 10 வயதில் எழுதத் தொடங்கி என்னுடைய பதினோராவது வயதில் எழுதி முடித்தேன். என்னுடைய 12 வது வயதில் ‘ஏன்? எப்போது? எப்படி?’ என்ற நூல் 14 சிறுகதைகள் சேர்ந்த சிறுகதை தொகுப்பு. இந்நூலில் அறம், இயற்கை போன்ற கருத்துக்கள் கூறப்பட்டிருக்கும். என்னுடைய 13 வது வயதில் மிருகதேசம் என்கின்ற குறுநாவலை எழுதினேன்.

ஒருவேளை மனிதர்கள் மிருகங்கள் வாழ்கின்ற உலகத்திற்குள் சென்றால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் எழுதிய நூல்தான் அது. 14வது வயதில் ‘எம் மண்ணின் நட்சத்திரங்கள்’ என்கிற நூல் என்னுடைய வயதில் உள்ள இளையோருக்கு தெரியாத 10 ஆளுமைகளைப் பற்றி கூறிய நூல். என்னுடைய ஐந்தாவது புத்தகம் 15வது வயதில் எழுதினேன். 40 கவிதைகள் சேர்ந்த கவிதை தொகுப்பு அது.

பிறகு என்னுடைய இலக்கிய ஆசான் நாறும்பூநாதன் மாமா இறப்பையொட்டி, அவருடைய ஆசைகளை நிறைவேற்றுவது போல் ‘சமூகத்திற்காக வித்திட்ட தமிழ்ப் பெண்கள்’ என்ற நூலானது இளைய தலைமுறைக்குத் தெரியாத 12 பெண்களைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பாக அதனை எழுதியுள்ளேன். என்னுடைய ஏழாவது புத்தகம் சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றி எழுதியுள்ளேன்.

பள்ளிக்குச் சென்று வந்த பிறகு நான் புத்தகம் வாசிப்பது என்பது என் வாழ்வில் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. வாசிப்பு எனக்கு மன நிம்மதியைத் தருகிறது. எனவே எப்போதும் வாசித்துக் கொண்டே இருப்பேன். தினமும் வாசித்துவிடுவேன்” என்றார்.

சூடாமணியின் தந்தையிடம் பேசிய போது, “எங்கள் வீட்டில் எப்போதும் அனைவரும் புத்தகம் வாசிப்போம். அதைக் கண்டு ஆர்வத்தில் சூடாமணியும் மூன்றாம் வகுப்பிலேயே புத்தகம் வாசிக்கத் தொடங்கி விட்டாள். இதற்கு பள்ளிக்கூடத்தின் பங்கும், சமூகத்தினுடைய பங்கும் மிக முக்கியமானது. சூடாமணி விருது பெற்றபோது எங்களை விட இந்த சமூகம் மிகச் சிறப்பாக கொண்டாடியது. நெல்லை எழுத்தாளர்கள் அனைவரும் இதனை அவர்கள் வெற்றியாகப் பார்க்கிறார்கள்.

ஒரு பெற்றோருக்கு இதைவிட வேறென்ன வேண்டும். தினமும் ஒரு பக்கமாவது வாசிக்காமல் உறங்க மாட்டாள். பிடித்த புத்தகமெனில் இரண்டு, மூன்று மணிநேரமாவது வாசிப்பாள். திடீரென்று பேசிக் கொண்டிருக்கையில் புத்தகங்கள் பற்றியும் பேசுவாள். அவளுடைய எழுத்தும் செயலும் இந்த சமூகத்திற்கு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அவளுடைய இலக்கிய ஆசான் நாறும்பூநாதன் ஐயா சொன்னதைப் போல் பத்து பேராவது அவளுடைய எழுத்தால் மனம் மாற வேண்டும். இளைஞர்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றுகின்ற போது இந்த சமூகம் நிச்சயம் மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *