இலங்கையின் புதிய அதிபராகும் முதல் இடதுசாரி அநுர குமார திசநாயக ! – Kumudam

Spread the love

மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து, தற்போது அதில் இருந்து கொஞ்சம் கோஞ்சமாக மீண்டும் வருகிறது இலங்கை. இந்த நிலையில், இலங்கையின் 9-வது அதிபர் தேர்தல் நேற்று (செப்டம்பர் 21) நடைபெற்றது. 38 வேட்பாளர்கள் போட்டியிட்ட இத்தேர்தலில், 1.7 கோடி பேர் வாக்களிப்பதற்காக 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த தேர்தலுக்கு அதிக செலவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இலங்கை ரூபாய் மதிப்பில் 1,000 கோடி என்றால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.276 கோடி செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

தேர்தல் நடந்த அதே தினமே வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. இரண்டாவது நாளாக தொடர்ந்த வாக்கு எண்ணிக்கை மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. 

இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் சுமார் 42.31 சதவீத வாக்குகளை பெற்று தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க புதிய அதிபராக தேர்வாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐக்கிய சக்தி முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச இரண்டாம் இடமும், ரணில் விக்ரம சிங்க மூன்றாம்  இடமும் பிடித்தனர்.

வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் இருந்தாலும், முதல் வாக்கு எண்ணிக்கையில் எந்த வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளை பெறவில்லை. இதனால் இரண்டாம் முறையாக வாக்கு எண்ணும் பணி நடைபெற்ற நிலையில், முதல் வாக்கு எண்ணிக்கையில் முதலிடம் பிடித்த அநுர குமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச பெற்ற வாக்குகள் மட்டுமே இரண்டாவது எண்ணிக்கையில் கணக்கில் எடுக்கப்பட்டது. இதில் அதிக வாக்குகளை பெற்று அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கையின் அதிபராக தேர்வாகியுள்ள முதல் இடதுசாரியான 55 வயதான அநுர குமார திசாநாயக்க, நாளை (செப்டம்பர் 23) இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கபப்டுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *