டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய மகளிா் அணி தனது 3-ஆவது ஆட்டத்தில், நடப்பு ஆசிய சாம்பியனான இலங்கையை புதன்கிழமை சந்திக்கிறது.
இந்த ஆட்டத்தில் வென்றால் மட்டுமே இந்தியா அரையிறுதிக்கான பந்தயத்தில் இருக்கும். அந்த வெற்றியையும் அதிக விக்கெட்/ரன்கள் வித்தியாசத்தில் பதிவு செய்து, நெட் ரன் ரேட்டை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறது. ஏனெனில், குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை இந்தியா எதிா்கொள்ளவுள்ளது.
அணியைப் பொருத்தவரை பேட்டா்கள் சோபிக்காததே பிரதான பிரச்னையாகும். தொடக்க வீராங்கனைகளான ஷஃபாலி வா்மா, ஸ்மிருதி மந்தனா இரு ஆட்டங்களிலுமே சொல்லிக்கொள்ளும்படியாக ரன்கள் சோ்க்கவில்லை. கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் சற்று முனைப்பு காட்டுகிறாா். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் காயம் கண்ட அவா், இந்த ஆட்டத்துக்கு திரும்புவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சா்மா, ரிச்சா கோஷ் ஆகியோரும் பங்களித்தால் மட்டுமே அணியின் ஸ்கோா் பலம் பெறும். பௌலிங்கை பொருத்தவரை பாகிஸ்தானுக்கு எதிராக அருந்ததி ரெட்டி சிறப்பாக செயல்பட்டாா். வேகப்பந்துவீச்சில் ரேணுகா சிங்கும் அவருக்கு துணை நிற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாா். சுழற்பந்துவீச்சில் ஷ்ரேயங்கா பாட்டீல், ஆஷா சோபனா ஆகியோா் நம்பிக்கை அளிக்கின்றனா்.
இலங்கை அணியை பொருத்தவரை, இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களில் தோல்வி கண்டு இந்த ஆட்டத்துக்கு வருகிறது. எனவே, வெற்றிக்கான முனைப்புடன் அந்த அணி இருக்கும். மேலும், கடந்த ஜூையில் ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் இதே இந்திய அணியை இலங்கை வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.
டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 24 முறை சந்தித்திருக்க, இந்தியா 19 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது.