இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 123 படகுகளுக்கு  தமிழக அரசு ரூ.6.74 கோடி நிவாரணம் | Tamil Govt to provide relief of Rs 6.74 crore to 123 boats seized by Sri Lanka Navy

1323799.jpg
Spread the love

ராமேசுவரம்: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 123 படகுகளுக்கு ரூ.6.74 கோடி நிவாரணம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த 24.01.2018 அன்று வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளை திரும்ப பெறுவதற்கு, அந்நாட்டு நீதிமன்றத்தில் படகின் உரிமையாளர் ஆஜராகி ஆவணங்களை சமர்பித்து வாதிட்டால் படகு விடுவிக்கப்படுகிறது. இல்லை என்றால் படகுகளை இலங்கை நீதிமன்றங்கள் நாட்டுடைமையாக்கி விடுகின்றன.

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் பயன்படுத்த இயலாத நிலையிலுள்ள தமிழகத்தைச் சார்ந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற தமிழக மீனவர்களின் கோரிக்கையை ஏற்று விசைப்படகு உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் ரூபாய் வீதமும், நாட்டுப்படகு உரிமையாருக்கு தலா ரூ.1.50 லட்சம் நிவாரணமும் வழங்க தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இந்த நிவாரணத் தொகை விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா 6 லட்சம் ரூபாய், நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 லட்சம் ரூபாய் அதிகரிக்கப்பட்டு கடந்த ஜுலை மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இதன் மூலம் கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து 2023-ம் ஆண்டு வரையிலும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 107 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா 6 லட்சம் ரூபாய் வீதமும், 16 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம், மொத்தம் ரூ.6.74 கோடி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தற்போது வரை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மீனவப் பிரதிநிதி தேவதாஸ் ராமேசுவரத்தில் கூறும்போது, “இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்திருக்கும் மீனவர்களுக்கு இதுவரை மத்திய அரசு எந்த நிவாரணமும் வழங்காத நிலையில், தமிழக அரசு மீனவர்கள் மீது அக்கறை கொண்டு விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதேசமயம், இந்த பட்டியலில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மேலும் 15 படகுகள் விடுபட்டுள்ளது. விடுபட்ட படகு உரிமையாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *