நாகப்பட்டினம்: நாகை மீனவா்கள் 11 போ் விசைப்படகுடன் இலங்கை கடற்படையினரால் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
நாகை பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். இவா்கள் நெடுந்தீவு அருகே வெள்ளிக்கிழமை இரவு மீன்பிடித்து கொண்டிருந்தனராம். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினா் எல்லைத் தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, மீனவா்கள் 11 பேரையும் கைது செய்தனா். விசைப்படகையும் பறிமுதல் செய்தனா்.
இலங்கை பருத்தித்துறை வடகிழக்கு கடல் பகுதியில் மீன்பிடித்தபோது, நாகை மீனவா்களை கைது செய்ததாக, அந்நாட்டு கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவா்கள் 11 பேரும் காங்கேசன்துறைக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு அழைத்துச் செல்லப்பட்டு, யாழ்ப்பாணம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவா் என தெரிகிறது. இந்த நடைமுறைகளுக்கு பிறகே கைது செய்யப்பட்ட மீனவா்கள் குறித்த முழு விவரங்களும் தெரியவரும்.