ராமேசுவரம்: ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 5 பேர், பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 9 பேர் என மொத்தம் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் கடலுக்குச் சென்ற படகு உரிமையாளர் ஜஸ்டின் மற்றும் மீனவர்கள் சைமன், சேகர், மோபின், டென்சன் ஆகியோர் தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி 5 மீனவர்களையும் சிறைபிடித்து, அவர்களது படகைப் பறிமுதல் செய்தனர். கைதான 5 மீனவர்களும் நேற்று மதியம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை ஆக. 7-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதேபோல, ராமேசுவரம் அருகே பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற டேவிட் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகை, புத்தளம் கடற்பரப்பில் செவ்வாய்க்கிழமை காலை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
படகிலிருந்த டிகோசன், முருகேசன், களஞ்சியராஜ், ஆனந் தன், பாலமுருகன், முருகதாஸ், கோட்டைசாமி, சக்திவேல், மாரியப்பன் ஆகிய 9 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர். அனைவரையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய் யக்கோரி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விடுவிக்க நடவடிக்கை… தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது வேதனை அளிக்கிறது.
இலங்கை சிறைகளில் 68 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், 235 மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை அரசின் கைது நடவடிக்கைகளால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வாழ்வில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. எனவே, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.