இந்தியக் கடல் எல்லைக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மீனவர்கள் பிரச்சினை
தமிழக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், பின்னர் அவர்களை சிறையில் அடைத்து விடுதலை செய்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமை யாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. மீனவர்கள் பிரச்சினைக்கு இதுவரை முடிவு எட்டப்படாமல் உள்ளது.
இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது
தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளது. இதனால் ஆழ்கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதில்லை. இந்த நிலையில் நாப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை அருகே இன்று இந்தியக் கடல் பகுதியில் கடல் எல்லையைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களின் 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்திய கடலோர காவல் படை போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.