கும்பகோணம் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் போதுமான வசதிகள் இல்லையென்று மக்கள் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர்.
இதுகுறித்து அங்கிருந்த பயணிகளிடம் கேட்கும் போது,
” கும்பகோணம் பேருந்து நிலையம் மிக முக்கியமான இடம். இங்க ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1000ற்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் வந்து போறோம். எங்களுக்கு இங்க முறையான கழிவறை வசதி இல்லை. ஒரு பேருந்து நிலையத்துல இருக்க வேண்டிய எந்தவிதமான அடிப்படை வசதியுமே இங்க முறையா இல்லை. பேருந்துக்காக நிற்கிற இடங்களில் கூட குண்டும் குழியுமாக தான் இருக்கு. இது சாதாரண நாட்கள்ல கூட பரவாயில்லை. கொஞ்சம் மழை பெஞ்சாக்கூட அந்த இடமே குட்டையா மாறிடுது.
இங்க பயணிகள் மட்டுமில்லாம வியாபாரம் செய்ற வியாபாரிகள் கூட அதிகமா பாதிக்கப்படுறாங்க. இங்க தேங்கி இருக்கிற மழைத்தண்ணியில வியாபாரம் பண்ண முடியாம நிறைய பேர் கஷ்டப்பட்டு இருக்காங்க.
பயன்பாடு இன்றி கிடக்கும் பாலூட்டும் அறை:
இங்கே அவசரத்துக்கு குழந்தைக்கு பாலூட்ட கூட இடம் இல்லை. 2015 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழக முழுவதும் பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறையினை வைத்தார். அதில் கும்பகோணமும் ஒன்று. இங்கு 2 மின்விசிறி, நாற்காலி, மின்விளக்குன்னு எல்லா வசதியும் இருந்துச்சு. ஆனா இப்போ கொஞ்ச காலமா இந்த பாலூட்டும் அறை பயன்பாடு இல்லாம பூட்டியே கிடக்கு. காரணம் என்னான்னு பார்த்தா அறையைச் சுற்றி அமைக்கப்பட்ட கண்ணாடிகள் உடைந்து, மின்விளக்குகள் எல்லாம் எரியாம வயர்கள் ஆபத்தான நிலையில் இருக்குது. இங்கு ஏராளமானோர் தாய்மார்களும் வராங்க. ஒரு குழந்தைக்கு பசிய ஆத்தக் கூட இடம் இல்லாமல் இருக்கிறது சிரமமா இருக்கு. அரசு இத சீக்கிரமாவே சரி செய்யணும்.
கழிவறையும் பயன்பாடு இன்றி துர்நாற்றம் வீசுது:
தாய்மார்கள் பாலூட்டும் அறையை ஒட்டி தான் இலவச கழிப்பறை இருக்கு. ஆனா அது இருக்கிறதும் ஒன்னு தான் இல்லாம இருக்கிறதும் ஒன்னு தான். கும்பகோணம் பேருந்து நிலையத்துல நவீன கட்டண கழிப்பறைகள் இருக்கு. ஆனா அதை இடத்துலே இருக்கிற பொதுக் கழிப்பறை பயன்பாடுகள் இல்லாம பூட்டியே இருக்கு. ஆண்களுக்கு கூட இலவச கழிப்பறை ஒன்னு இருக்கு. பெண்களுக்குனு இருக்கிற கழிப்பறை தூய்மை இல்லாம பூட்டியே இருக்கு. பூட்டுனது மட்டும் இல்லாம கழிப்பறை வாசலிலே குப்பையை கொட்டியும் வச்சிருக்காங்க. இதனால ரொம்ப துர்நாற்றம் வீசுது. இது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துது. ஒரு அவசரத்துக்கு கூட ஒதுங்க முடியாத நிலைமையில இருக்கோம். இதை அரசு சீக்கிரமாகவே சரி பண்ணா நல்லா இருக்கும்.