இலவச வேட்டி சேலை உற்பத்திக்கு முன்பணமாக ரூ.100 கோடி வழங்க தமிழக அரசு அனுமதி | Allow Rs 100 crore as advance payment to co-operative societies for production of free Dhoti sarees: TN Govt

1302681.jpg
Spread the love

சென்னை: 2025 பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் உற்பத்திக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.100 கோடி வழங்கி அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தின் மூலம் ஏறத்தாழ 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலைகளும், அதே போல ஏறத்தாழ 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டிகளும் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகையின்போது, தமிழகம் முழுவதிலும் உள்ள நியாயவிலைக் கடைகளின் மூலம் இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் கைத்தறி மற்றும் பெடல் தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதால், கைத்தறி மற்றும் பெடல்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புகளுக்கு இத்திட்டம் பெரிதும் உதவியாக இருக்கிறது.

இந்த நெசவாளர் குடும்பங்கள் பயன்பெறுவதை முன்னிட்டு இலவச வேட்டி சேலை திட்டத்தின் கீழ் பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்குத் தேவைப்படும் வேட்டி சேலைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் உற்பத்தி செய்து வழங்கிட ஏதுவாக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்பணமாக வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 100 கோடி ரூபாய் அனுமதித்து உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தின் மூலம் 2025 தைப் பொங்கல் திருநாளையொட்டி, தமிழகம் முழுவதிலும் உள்ள ஏழை மக்களுக்கு ஏறத்தாழ 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலைகளும், அதேபோல ஏறத்தாழ 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டிகளும் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *