“இலவச வேட்டி, சேலை திட்டத்தில் மோசடி” – தங்கமணி குற்றச்சாட்டு | Former minister Thangamani speech at namakkal slam dmk

1327072.jpg
Spread the love

நாமக்கல்: இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு தேவையான பொருட்களை வழங்காமல், அவற்றை உற்பத்தி செய்தது போல் திமுக அரசு கணக்கு மட்டும் காட்டி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சியின் சார்பு அமைப்புகளின் சார்பில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. பரமத்தி எம்எல்ஏ-வான சேகர், திருச்செங்கோடு முன்னாள் எம்எல்ஏ-வான பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தலைமை வகித்துப் பேசியது; “நாமக்கல் மாவட்டம் எப்போதும் அதிமுகவின் கோட்டை. அதனை கடந்த முறை நடைபெற்ற தேர்தலிலும் நிரூபித்து உள்ளோம்.

நாமக்கல் மக்களவைத் தொகுதியில், தமிழக அளவில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் அதிமுக தோல்வியடைந்தது. ஆனால், இனி வர உள்ள அனைத்து தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி. மீண்டும் 2026-ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமையும். கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி முதல்வராவார். அதைத்தான் அனைத்துத் தரப்பு மக்களும் எதிர்பார்த்துள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டன.

குறிப்பாக, திருச்செங்கோடு மற்றும் பரமத்தி தொகுதியில் பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டன. ஈரோட்டுக்கும், நாமக்கல்லுக்கும் புதிய பாலம் அமைத்து தந்தது கடந்த அதிமுக ஆட்சியில் தான். திருச்செங்கோடு முதல் ஈரோடு வரை நான்கு வழிச்சாலை அமைத்து தந்தது அதிமுக ஆட்சியில் தான். கடந்த மூன்றரை ஆண்டு கால ஆட்சியில் திமுக இந்த பகுதிகளுக்கு எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை.

கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் விசைத்தறிகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் இயங்கி வந்தன. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இலவச வேட்டி சேலை திட்டத்தை பாழாக்கி வருகிறது. குறிப்பாக, இலவச வேட்டி சேலை உற்பத்திக்கு விசைத்தறிகளுக்கு தேவையான பொருட்களை அரசு தருவதில்லை. ஆனால், உற்பத்தி செய்தது போல் கணக்கு மட்டும் காட்டி வருகிறது.

மேலும், இலவச வேட்டி, சேலையை பொதுமக்களுக்கு வழங்குவதில் காலம் தாழ்த்தி வருகிறது. தமிழகத்தில் தற்போது எங்கு பார்த்தாலும் கஞ்சா, போதைப்பொருட்கள் புழக்கம் அதிகமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகமாக நடக்கிறது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் உயராமல் இருந்தது. ஆனால், திமுக அரசு வந்ததில் இருந்து மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. குறிப்பாக, ஆண்டுக்கு 6 சதவீதம் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் அதிமுக வெற்றி பெறும். அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *