இல.கணேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

dinamani2F2025 08 152Fgvdprhle2FGyZ0BJpW0AA5 3
Spread the love

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

முதல்வர் ஸ்டாலின், சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல.கணேசன் இல்லத்துக்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் நேரு, மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “மூத்த அரசியல் தலைவரும் நாகாலாந்து மாநில ஆளுநருமான இல. கணேசன் மறைந்த செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன்.

இல. கணேசன் அவர்கள் பா.ஜ.க. மாநிலத் தலைவர், பா.ஜ.க. தேசிய துணைத்தலைவர், மாநிலங்களவை உறுப்பினர், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் ஆளுநர் எனப் பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட வகித்த, நீண்ட பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர்.

அரசியல் வாழ்க்கைக்காகத் திருமணம் கூட செய்துகொள்ளாமல் பொதுவாழ்வுக்குத் தம்மை அர்ப்பணித்தவர். நெருக்கடி நிலைப் பிரகடனத்தை கண்டித்துப் போராட்டம் நடத்தி, பாடல்கள் எழுதியவர். மாற்றுக் கொள்கைகள் கொண்ட இயக்கங்களில் உள்ள தலைவர்களிடத்திலும் மரியாதை பாராட்டி, மாண்புடன் நடந்துகொண்டு, அரசியல் நாகரிகத்தைப் பேணிக்காத்த அரிய தலைவர்களில் ஒருவர்.

இல. கணேசன் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தார். கலைஞர் முதல்வராக இருந்தபோது, கணேசனின் பிறந்தநாளில் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, தமது அன்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எளிமை, அதிர்ந்து பேசாத பண்பு, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தன்மை ஆகியவற்றால் அனைத்துத் தரப்பிலும் நண்பர்களைக் கொண்டவராக இல. கணேசன் அவர்கள் விளங்கினார்.

என் மீதும் தனிப்பட்ட முறையிலும் அன்பு காட்டி வந்தார். அவரது இல்லத்தில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அவரும் அவரது குடும்பத்தினரும் என்னை நேரில் வந்து அழைக்கும் அளவுக்கு நல்ல நட்பினை நாங்கள் இருவரும் பேணி வந்தோம்.

உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் முழு உடல்நலம் பெற்று, மீண்டு வருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அவரது மறைவுச் செய்தி வேதனையளிக்கிறது.

அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், அரசியல் கட்சித் தலைவர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Chief Minister Stalin personally pays tribute to the body of Ia Ganesan!

இதையும் படிக்க : நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் காலமானார்!
இதையும் படிக்க : தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தவர் இல.கணேசன்: மோடி இரங்கல்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *