இளம்பெண்களை துரத்தி அச்சுறுத்திய நபர்களை கைது செய்ய தலைவர்கள் வலியுறுத்தல் | Leaders urge arrest of individuals who chased and threatened young women

1348881.jpg
Spread the love

தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும், சென்னையில் இளம்பெண்களை திமுக கட்சிக் கொடி கட்டிய காரில் துரத்திச் சென்று அச்சுறுத்திய நபர்களை கைதுசெய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர் சாலையின் நடுவில் மறித்து, சினிமா காட்சிகளை போல அப்பெண்களை அச்சுறுத்திய சம்பவம் நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது. வீடுவரை துரத்தி வந்த கயவர்கள் குறித்து புகாரளித்தால் ‘இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச்சொன்னது’ என போலீஸார் கேட்டதாகவும் பாதிக்கப்படோர் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் சுதந்திர உரிமைகூட திமுக ஆட்சியில் பறிக்கப்பட்டிருக்கிறதா, பெண்களுக்கு எதிரான குற்றங்களை மேற்கொள்ள திமுகவின் அடையாளம் என்பது லைசன்சா, குற்றம் செய்தவர்கள் திமுகவினர் என்றால் காவல்துறை ஆமை வேகத்தில் தான் செயல்படுமா, யார் அந்த சார்? என்ற கேள்விக்கு எரிச்சல் அடைந்த முதல்வர் ஸ்டாலின். இந்த சார்களை பற்றி என்ன சொல்ல போகிறார். இவ்வழக்கில் அரசியல் தலையீடு இல்லாமல் குற்றத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.

பாமக தலைவர் அன்புமணி: சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இளம்பெண்கள் சிலர் பயணித்த காரை, திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர் வழிமறித்து, பெண்களிடம் அத்துமீறும் அளவுக்கு சமூக விரோதிகளுக்கு துணிச்சல் ஏற்பட்டிருப்பது அச்சமும் கவலையும் அளிக்கிறது. இதுகுறித்து புகாருக்கு சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸார், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டிய காவல்துறையே குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழகத்தில் இரவு நேரங்களில் காரில் செல்லும் பெண்களுக்கு தொந்தரவு செய்வது, மிரட்டல் விடுப்பது, பணம் பறிப்பது போன்றவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பெண்களுக்கான பாதுகாப்பே கேள்விக்குறியாக உள்ளது. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த பெண்களை துரத்தி, அத்துமீறலில் ஈடுபட்ட திமுக கொடி பொருத்திய காரில் சென்ற நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: திமுக கொடி கட்டிய காரில் வந்து இளம்பெண்களிடம் ரகளை செய்த கும்பல், அவர்களை துரத்திச் சென்று மிரட்டியிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. நாளுக்கு நாள் திமுகவினர் தொடர்புடைய குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *