மதுரை: இளம் தொழில் முனைவோரின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என மதுரையில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடந்த இளம் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
மதுரை – அழகர்கோயில் சாலையிலுள்ள தனியார் ஓட்டலில் இந்திய தொழில் கூட்டமைப்பு( சிஐஐ ) மற்றும் யங் இந்தியா சார்பில், இளம் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம் ,கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடந்தது. தமிழக ஆளுநர் ஆர்என்.ரவி பங்கேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியதாவது: மதுரை தூங்காகரம். இங்கே எப்போதும் ஒரு சக்தி உள்ளது. இங்கு வந்தாலே ஒரு புதுசக்தி கிடைக்கும். இந்திய இளைஞர்களும், பெண்களும் சவாலோடு இருந்தால் தான் தலைமை பொறுப்புகள் கிடைக்கும். அந்த பொறுப்புகளுக்கு வரமுடியும். தலைமை பண்பு, புதிய சிந்தனை, கண்டுபிடிப்புகளில் இந்தியா உலகத்துக்கே வழிகாட்டியாக இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் மூத்த குடிமக்கள் அதிகம் தலைமைத்துவத்தில் இருந்தனர். தற்போது இளைய தலைமுறையினரும் அதற்கு வந்துள்ளனர். புதுவிதமான சிந்தனைகளுடன் வருவோர் தான் நாட்டை வழிநடத்த வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட கல்விக்கொள்கையை மாற்றும் வகையில் புதிய கல்விக்கொள்கை 2020-ல் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய உந்துதலை கொடுக்கும்.. இளம் தலைமுறையினர் வாழ்க்கையில் முன்னேறும் விதமாக இப்புதிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு நம்பிக்கை, புதிய உந்துதலை கொடுக்கும். இதன்மூலம் பொறியியல் படிப்பவர்களுக்கு, அவர்கள் படிக்கும் போதே தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் கிடைக்கும். கல்வி என்பது அழுத்தத்துடன் தான் இருக்கும். இதை தாண்டி படித்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். உங்களை நீங்கள் முன்னேற்றினால் நாடு தானாகவே முன்னேறும். எல்லாருக்குமான வளர்ச்சி வேண்டும் என்பது முக்கியம்.
அரசின் திட்டங்கள், செயல்முறை உள்ளிட்டவைகள் அடங்கும். பிரதமர் தலைமையில் அறிவிக்கப்படும் வளர்ச்சி திட்டங்கள் சமத்துவ பொருளாதாரம் அடைய வழி வகுக்கும்.
பிற நாடுகளில் ராணுவத்தில் கட்டாயம் பணியாற்ற வேண்டும். அக்னி வீரர் திட்டத்தின் மூலம் 6 ஆண்டு ராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்பை இந்திய மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இளைஞர்கள் இளம் வயதினர் ஒழுக்கம், உடல் ஆரோக்கியம், நேர்மையான சிந்தனை வளர்க்க உதவும். கேலோ இந்தியாவும் இளைஞர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள பெரும் பங்கு வகிக்கிறது. இதன்மூலம் இளைஞர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க உதவுகிறது.
ரஷ்யா – உக்ரைன், ஹமாஸ் – இஸ்ரேல் இடையே நடக்கும் போர் பதற்றம் நிகழ்காலத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ரஷ்யா – உக்ரைன் ஆகிய இரு நாடுகளில் யார் பக்கம் என்று இந்தியாவிடம் கேட்டால். இந்தியா அமைதியின் பக்கம் நிற்கும். குறிப்பாக இந்தியா வன்முறைக்கு எதிரான நிலைப்பாட்டில் தான் இருக்கும்.
தமிழ்நாடு நன்றாக வளர்ந்துள்ளது. இருப்பினும், தற்போதும் கூட வறுமை இல்லாத வீடு இல்லை என்ற சூழலே உள்ளது. ஜிடிபி மட்டும் வைத்துக் கொண்டு வளர்ச்சி என, குறிப்பிடமுடியாது. எல்லோருக்குமான வளர்ச்சியாக இருக்கவேண்டும். எல்லோருக்கும் குரு கிடைக்கமாட்டார். மை பாரத் போர்ட்டல், யூத் போர்ட்டல் உள்ளது. இவற்றை இளைய தலை முறையினர் பயன்படுத்திக் கொள்ளலாம். மேக் இன் இந்தியாவை தாண்டி உலகத்திற்கென தயாரிக்க வேண்டும். தூதரங்கள் மூலம் நமது ஏற்றுமதியை தரமாக கொடுக்கவேண்டும். இளம் தொழில் முனைவோர்களின், வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிக்கும். இவ்வாறு ஆளுநர் பேசினார். நிகழ்வில் கருத்தரங்கின் கன்வீனர் சூரஜ்சுந்தர சங்கர் உள்ளிட்ட இளம் தொழில் முனைவோர்கள் பங்கேற்றனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடுவதில் தடுமாற்றம் ? மதுரையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் முதலில் தேசிய கீதம், பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறிய போதிலும், தடுமாற்றம் அடைந்து மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாட தொடங்கினர்.பின்னர் சுதாரித்துக் கொண்ட அவர்கள் நிறுத்திவிட்டு, தேசிய கீதத்தை பாடினர். பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தும் முறையாக பாடப்பட்டது. ஆளுநருக்கு பாரம்பரிய பொருட்களான நெல்லை அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலைமிட்டாய், மதுரை உடன்குடி பண்கற்கண்டு, மதுரை ஜிகர்தண்டா,தேன் மிட்டாய், மதுரை மீனாட்சி அம்மன் புகைப்படம் ஆகியவற்றை தொழிலதிபர்கள் வழங்கினர். தொடர்ந்து தொழில் இளம் முனைவோர்களுடன் ஆளுநர் கலந்துரையாடினார்.