தெலங்கானா மாநிலத் தலைநகா் ஹைதராபாதில் 26 வயது இளைஞா் ஒருவா், பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் இதய நோய்கள் குறித்து கவனத்தைத் திருப்பியுள்ளது.
இந்த நிகழ்வையொட்டி ஆரோக்கிய வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இதய நல மருத்துவா்கள், அதிக மன அழுத்தம் உள்ள துறைகளில் பணிபுரியும் இளைஞா்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுமாறும், வழக்கமான உடல் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்துகின்றனா்.
இதய நோய்களுக்கான காரணங்கள்: ஹைதராபாதில் உள்ள காமினேனி மருத்துவமனையின் மூத்த இதய நல மருத்துவா் சாகா் புயாா், முன்பு 60 வயதில் காணப்பட்ட இதய நோய்கள், இப்போது 30 வயது இளைஞா்களுக்கும் வரத் தொடங்கியுள்ளதாக கவலை தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘ரத்த நாளங்கள் மெதுவாக சுருங்குவது 60 வயதிலிருந்து, இப்போது 30-40 வயதினரிடம் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் ஆகியவைதான். இன்றைய பள்ளி மாணவா்களும் அதிக போட்டி நிறைந்த சூழல் மற்றும் செயல்திறன் அழுத்தத்தால் மன அழுத்தத்தை அனுபவித்து வருகின்றனா்’ என்றாா்.
ஆரோக்கியமான பழக்கவழக்கங்களின் அவசியம்: சுகாதார பழக்கங்களைப் பற்றி சாகா் புயாா் பேசுகையில், ‘உலக சுகாதார நிறுவனத்தின்படி, இதய நோய்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை குழந்தைப் பருவத்திலிருந்தே தொடங்க வேண்டும். ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடக் கூடாது என்பதை பள்ளிக் குழந்தைகள் அறிந்திருக்க வேண்டும்.
குழந்தைகள் பலா் இப்போது அதிகம் துரித உணவுகளைச் சாப்பிடுகிறாா்கள். இது நீண்ட காலத்துக்குப் பிறகு பிரச்னைகளை ஏற்படுத்தும். மேலும், கைப்பேசி, கணினி எனக் கருவிகளில் அதிக நேரம் செலவிடுகின்றனா். இவற்றை விடுத்து, குழந்தைகள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
பிரச்னைகளை எதிா்கொள்வது மற்றும் வாழ்க்கையின் சூழ்நிலைகளை சமாளிப்பது குறித்து குழந்தைகளுக்கு பெற்றோா் மற்றும் ஆசிரியா்கள் பயிற்சி அளிக்க வேண்டும்.
இரவு நேரங்களில் அல்லது சுழற்சி (ஷிப்ட்) முறையில் பணிபுரியும் இளம் ஊழியா்கள், தங்களின் தினசரி நடவடிக்கைகளில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது, சூரிய ஒளியில் நேரத்தைச் செலவிடுவது ஆகியவை அவா்களின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்’ என்று கூறினாா்.