பிரம்ம சாஸ்தா திருக்கோலம்!
சேயாற்றின் வடகரையில் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது ஆலயம். இருபுறமும் யானைகள் தாங்க, ஐந்து நிலைகளும் ஏழு கலசங்களும் கொண்ட ராஜகோபுரம் வரவேற்கும்.
இங்கே முருகப்பெருமான், மேலிரு கரங்களில் ருத்திராட்ச மாலையும் கமண்டலமும் திகழ கீழிரு கரங்களில் வலக் கரம் அபய ஹஸ்தம் காட்ட, இடக்கரத்தால் கடி ஹஸ்தம் காட்டி அருள்புரிகிறார்.
முருகப் பெருமானின் இந்தத் திருக்கோலம், பிரம்ம சாஸ்தா திருக்கோலம். பிரணவப் பொருளை மறந்த பிரம்மனைத் தண்டித்து முருகப் பெருமான் ஏற்றருளிய திருக்கோலம்.
எனவே இங்கே வந்து படிக்கும் மாணவர்கள் வழிபட்டால் அவர்களுக்குக் கல்வியும் ஞானமும் ஒருசேரக் கிடைக்கும் என்கிறார்கள்.
பொதுவாக முருகனோடு வள்ளி, தெய்வயானை காட்சி தருவர். ஆனால் இங்கே சிறு முருகன் பாலனாக அருள்வதால் தேவியர்க்கு சந்நிதிகள் இல்லை. ஆனால், கஜவல்லி அம்மன் என்றோர் அம்மன் சந்நிதி உள்ளது. கருவறை யின் இடப்புறம் உற்சவ மூர்த்தங்களும், ஆறுமுகக் கடவுளின் மூர்த்தமும் அருளும் மண்டபமும் உள்ளது.

பிராகாரத்தின் இடப்புறத்தில் மூலவரான பால சுப்ரமணியரின் உற்சவ மூர்த்தி சந்நிதியும், தொடர்ந்து காசி விசுவநாதர், பெருந்தண்ட உடையார் சந்நிதிகளும் உள்ளன. பிராகாரத்தின் வடமேற்கு மூலையில் இருந்த சிறு மண்டபத்தைக் காண்கிறோம். அதனுள்தான் முருகப்பெருமான் ஏவி ஊன்றிய வேலாயுதத்தின் சிலா வடிவம் அமைந்துள்ளது.
வடகிழக்கு மூலையில், முருகப்பெருமான் சந்நிதிக்கு எதிரில் சற்றுத் தள்ளி சுவாமிநாத சுவாமி சந்நிதி உள்ளது. இந்தச் சந்நிதியில் கடம்பநாதர் சிறு சிவலிங்க வடிவில் எழுந்தருளியிருக்கிறார்.
இந்தத் தலத்துக்கு வந்தால் முருகன் அருள் பரிபூரணமாகக் கிடைப்பதோடு வாழ்வில் வெற்றிகளும் குவியும் என்கிறார்கள். மேலும் முருகப்பெருமானின் அருட்பார்வை பட்டாலே எதிரிகள் ஓடி ஒளிவார்கள் என்றும் அமைதியான வாழ்க்கை ஸித்திக்கும் என்றும் சொல்கிறார்கள் பக்தர்கள்.
இங்கே சித்திரை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். மிருகசீரிட நட்சத்திர நாளில் தொடங்கி, சித்திரை நட்சத்திரத்தன்று தீர்த்தவாரியுடன் உற்சவம் நிறைவடையும். ஆவணி மாதம் வளர்பிறை துவிதியை திதியில் தொடங்கி சஷ்டி திதி வரை ஐந்து தினங்கள் பவித்ரோற்சவம் நடைபெறும்.
பங்குனி மாதம் சுக்ல பட்சம், மக நட்சத்திரம் கூடிய நாளில், அருள்மிகு பாலசுப்பிரமணியர் பல ஊர்களின் வழியாக பக்தர்களுக்குக் காட்சி தந்தபடி, இளையனார்வேலூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ள கடம்பர்கோயிலுக்கு எழுந்தருளி, இரவு மலையன், மாகறன் ஆகியவர்களை சம்ஹாரம் செய்து திரும்புவார்.
இவை தவிர்த்து கிருத்திகை, சஷ்டி, வைகாசி விசாகம் போன்ற தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
எப்படிச் செல்வது?: காஞ்சிபுரம் – உத்திரமேரூர் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இளையனார்வேலூர்தான் அந்தத் தலம். தினமும் காலை 6 முதல் 10 மணி வரை; மாலை 4 முதல் 8:30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.