சென்னை: “இளையராஜா விவகாரத்தை திரித்து, பிரித்து பேசுகிற வன்மப் போக்கை கண்டிக்கிறேன்,” என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடிகை கஸ்தூரி இன்று (டிச.16) பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “திமுகவை வீழ்த்த ஒரு புதிய காற்று தமிழகத்தில் வீச வேண்டும் என்றால், அதற்கு அனைவரும் ஒருமித்த ஒரு கூட்டணியாக இருந்து தேர்தலை சந்திப்பதே சிறந்த முன்னேற்பாடாக இருக்கும்.
கடந்த ஒருமாத காலமாக நான் சந்தித்துக் கொண்டிருக்கும் வேறுபாடுகளால், என்னுடைய வாழ்க்கை ரொம் மாறிபோய்விட்டது. அந்த மாற்றங்கள் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பேசினேன். கொஞ்சம் அரசியலும் பேசியிருக்கிறோம். மொத்த அரசியலையும் பேசிமுடித்தப் பிறகு, ஊடகங்களிடம் அதுகுறித்து தெரிவிப்பேன்.
இளையராஜா என்பவர் ஒரு இசை கடவுள். கடவுளுக்கு கோயிலுக்குப் போக வேண்டும் என்ற அவசியமே இல்லை. இளையராஜா எங்கு சென்றாலும், அவரே ஒரு கோயில், கடவுள்தான். ஆனால், அவரை கோயிலினுள் அனுமதிக்கவில்லை என்றொரு செய்தி வந்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இப்படிப்பட்ட பிரச்சாரங்களை வைத்து இன்னும் இந்த நாட்டில் எத்தனை நாட்கள்தான் ஏமாற்றுவார்கள்?
காரணம், கருவறைக்குள் எந்த சாதியை சேர்ந்தவர்களுமே போக முடியாது. அது இளையராஜா, கஸ்தூரி யாராக இருந்தாலும் கருவறைக்குள் போக முடியாது. அது பிராமணர்களாக இருந்தாலும் கருவறைக்குள் போகமுடியாது. கருவறைக்குள் அர்ச்சகர்கள் மட்டும்தான் போகமுடியும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். அர்ச்சகர்கள் எந்த சாதியாக இருந்தாலும் கருவறைக்குள் போக முடியும். இவ்வளவுதான் செய்தி.
இதை திரித்து, பிரித்து பேசுகிற இந்த வன்மப் போக்கைக் கண்டித்துதான், நவ.3-ம் தேதி நான் பேசினேன். அதையேதான், நான் திரும்பவும் பேசுகிறேன். இளையராஜா கருவறைக்குள் போகவில்லை. அவர் போக முயற்சித்தார், இதோ இங்கே நில்லுங்கள் என்றதும், அவர் அங்கே நின்றார். அவருக்கு மரியாதை செய்ய வேண்டும், அந்த இடத்தில் நிற்குமாறு கூறியுள்ளனர். இளையராஜா அங்கு நின்றுள்ளார். இவ்வளவுதான் அங்கே நடந்தது,” என்று அவர் கூறினார்.