இளையான்குடி: இளையான்குடி செப்டிக் டேங்க் குழி தோண்டியபோது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்தனர். மேலும், காப்பாற்ற குழிக்குள் இறங்கிய தீயணைப்பு வீரரும் மயக்கமடைந்தார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பிஸ்மில்லா நகரைச் சேர்ந்தவர் சிக்கந்தர். இவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். கடந்த 3 நாட்களாக 2.5 அடி விட்டம் கொண்ட செப்டிக் டேங்க் குழி தோண்டப்பட்டு வருகிறது. இப்பணியில் நேற்று சீத்தூரணியைச் சேர்ந்த ராமையா (50), திருவுடையார்புரத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (50) ஆகியோர் ஈடுபட்டு வந்தனர். குழியை 25 அடிக்கு மேல் தோண்டிய நிலையில், திடீரென கழிவுநீர் வந்துள்ளது. அப்போது இருவரையும் விஷவாயு தாக்கியதாக கூறப்படுறது.
இருவரும் மயக்கமடைந்த நிலையில், தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். ஒரு வீரர் குழிக்குள் இறங்கியபோது அவருக்கும் மயக்கம் வந்தது. இதையடுத்து, அவரை உடனடியாக மேலே தூக்கினர். பின்னர் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு நலமானார். பின்னர் ஆக்சிஜன் சிலிண்டருடன் குழிக்குள் இறங்கி இருவரையும் மீட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். மயக்கத்தில் இருவரையும் இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து இளையான்குடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து சீத்தூரணி பகுதி மக்கள் கூறுகையில், ‘பிஸ்மில்லா நகர் அருகே சீத்தூரணி கண்மாய் பாசன கால்வாய் உள்ளது. இக்கால்வாயில் இளையான்குடி நகர் பகுதியில் இருந்து கழிவுநீர் விடப்படுகிறது. கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி, நிலத்தடியில் இறங்கி வருகிறது. அதனால் தான் குழி தோண்டியபோது விஷவாயு தாக்கி இருக்கலாம்’ என்றனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், ‘2.5 விட்டம் கொண்ட குழியை 25 அடி ஆழத்துக்கு தோண்டியுள்ளனர். இதனால் விஷ வாயு தாக்கியதா, ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தார்களாக என்பது குறித்து தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும்’ என்றனர்.