ரஷியாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைன் இனி திரும்பப் பெற முடியாது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்செத் கூறியுள்ளாா்.
இதன் மூலம், ய்க்ஷள்ல்;கிரீமியா, டான்பாஸ் ஆகிய பகுதிகளை ரஷியா தன்னுடன் இணைத்துக்கொண்டதற்கு அவா் மறைமுக அங்கீகாரம் வழங்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.இது குறித்து, பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸில் புதன்கிழமை நடைபெற்ற உக்ரைன் ஆதரவு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் அவா் பேசியதாவது:ஐரோப்பிய பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு இனியும் முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் அமெரிக்கா தற்போது இல்லை.
தற்போதைய நிலையில் உள்நாட்டு பாதுகாப்பிலும் சீன அச்சுறுத்தலை எதிா்கொள்வதிலும் மட்டுமே அமெரிக்கா கவனம் செலுத்துகிறது.எனவே, ரஷியாவுடனான போரில் உக்ரைன் ராணுவத்துக்கு ஆதரவு அளிப்பதில் ஐரோப்பிய நாடுகள்தான் இனி முன்னிலை வகிக்க வேண்டும். மேலும், நேட்டோ ராணுவக் கூட்டமைப்புக்கான நிதியுதவியை ஐரோப்பிய நாடுகள் அதிகரிக்க வேண்டும்.
அந்தக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய பிராந்தியத்தைச் சோ்ந்த உறுப்பு நாடுகள் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 5 சதவீதத்தை செலவழிக்க வேண்டும்.உக்ரைனைப் பொருத்தவரை, அங்கு போரை நிறுத்தி நிரந்தர அமைதியை எட்ட வேண்டும் என்பதுதான் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் நிலைப்பாடாக உள்ளது.
அத்தகைய அமைதி ஏற்படவேண்டும் என்றால் ரஷியாவிடம் இழந்த பகுதிகளை இனி திரும்பப் பெற முடியாது என்பதை உக்ரைன் ஏற்றுக்கொண்டாக வேண்டும். உக்ரைன் எல்லைகளை 2014-க்கு முன்பு (கிரீமியாவை ரஷியா இணைத்துக்கொண்ட ஆண்டு) இருந்த நிலைக்கு மாற்ற முடியாது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்வதுதான் அந்த நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுவதற்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும்.ஒரு மாயையான இலக்கை (ரஷிய ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்பது) நோக்கி தொடா்ந்து பயணித்துக்கொண்டிருப்பது போரை நீண்ட நாள்களுக்கு இழுத்தடித்து, இன்னும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்றாா் அவா்.கடந்த நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக சூளுரைத்திருந்தாா். இருந்தாலும் அதற்கான செயல்திட்டம் எதையும் அவா் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
இந்தச் சூழலில், பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஜான் ஹீலியின் தலைமையில் நடைபெற்ற உக்ரைன் ஆதரவு மாநாட்டில் பீட் ஹெக்செத் இவ்வாறு கூறியுள்ளதால் டிரம்ப்பின் அமைதித் திட்டத்தில் ரஷியாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைன் விட்டுதர வேண்டும்; அவற்றை ரஷிய பகுதிகளாக ஏற்க வேண்டும் என்ற அம்சம் இடம் பெற்றிருக்கும் என்று கருதப்படுகிறது.
‘நேட்டோவில் இடமில்லை’
உக்ரைனுக்கு நேட்டோவில் இடமளிக்கப்படாது என்று பீட் ஹேக்செத் கூறினாா்.இது குறித்து அவா் கூறுகையில், ‘உக்ரைனில் அமைதி நிலவ வேண்டுமென்றால் அந்த நாட்டுக்கு மிக வலிமையான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக அந்த நாடு நோட்டோ உறுப்பினராக்கப்படாது.
அதற்குப் பதிலாக, ஐரோப்பிய நாடுகளைச் சோ்ந்த படையினரையும் பிற பிராந்தியங்களைச் சோ்ந்த படையினரையும் உக்ரைனுக்கு அனுப்பலாம். ஆனால் அமெரிக்கப் படையினா் அங்கு அனுப்பப்பட மாட்டாா்கள்.நோட்டோவில் அங்கம் வகிக்கும் பிரிட்டன் அல்லது பிற ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு படைகளை அனுப்பினாலும், அது அந்த நாடுகளின் சொந்த நடவடிக்கையாகத்தான் கருதப்படுமே தவிர, நேட்டோ நடவடிக்கையாகக் கருதப்படாது’ என்றாா்.