“இழிவுபடுத்தும் நோக்குடன் செய்யப்படும் விமர்சனங்கள்" – ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக செல்வப்பெருந்தகை!

Spread the love

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாலிவுட் குறித்துப் பேசியிருந்தார். அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் வைரலானது.

அதைத் தொடர்ந்து, பாலிவுட் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தவறாகப் பேசியிருப்பதாகவும், அவர் முஸ்லிம் என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும் பேசியதாக செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து பலரும் ஏ.ஆர். ரஹ்மானை விமர்சித்திருந்தனர்.

 ஏ.ஆர். ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான்

இந்தச் சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத்தான் ஏ.ஆர்.ரஹ்மான் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “யாரையும் புண்படுத்தும் எண்ணம் என்னுடைய நோக்கமில்லை. இந்தியனாக இருப்பதை ஆசீர்வதிக்கப்பட்டதாகக் கருதுகிறேன். இசையின் மூலம் சேவை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்” எனத் தெரிவித்திருந்தார்.

ஆனாலும், பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஏ.ஆர்.ரஹ்மான் மீதான விமர்சனத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டின் எம்.பி கனிமொழி, ஜோதிமணி, மேற்கு வங்க எம்.பி மஹுவா மொய்த்ரா போன்ற பலரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தின் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகையும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “ இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிரான விமர்சனத்திற்கு கண்டனம். உலகளவில் இந்திய இசைக்கு பெருமை சேர்த்தவர், ஆஸ்கர் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளைப் பெற்றவர், இசை அமைப்பாளர் திரு.ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள். அவருக்கு எதிராக சமீப காலமாக முன்வைக்கப்படும் தேவையற்ற, அடிப்படை அற்ற விமர்சனங்கள் மிகுந்த வருத்தத்தையும் கவலையையும் அளிக்கின்றது.

பல தசாப்தங்களாக இசையின் மூலம் மனிதநேயம், அமைதி, ஒற்றுமை ஆகிய மதிப்புகளை உலகம் முழுவதும் பரப்பி வரும் திரு.ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் பங்களிப்பு அளவிட முடியாதது. கலைஞர்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்;. மேலும், அவர் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று அவர் பதிலளித்துள்ளார்.

செல்வப் பெருந்தகை
செல்வப் பெருந்தகை

இந்நிலையில் அவர் மீது தனிப்பட்ட முறையிலும் கருத்துத் தாக்குதல் நடத்துவதும், அவமதிக்கும் வகையிலும் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் அனைத்தும் ஜனநாயகத்திற்கும், கலாச்சார மரபுகளுக்கும் முற்றிலும் முரணானவை. கலைஞர்களை அவர்களின் படைப்புகளின் அடிப்படையில் விமர்சிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் அவர்களின் சாதனைகளையும், சமூகத்திற்கு அளித்த பங்களிப்புகளையும் புறக்கணித்து, இழிவுபடுத்தும் நோக்குடன் செய்யப்படும் விமர்சனங்கள் கண்டிக்கத்தக்கவை.

எனவே, இசை மேதை திரு.ஏ.ஆர். ரஹ்மான் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் இத்தகைய கடுமையான விமர்சனங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன். கலை, கலாச்சாரம், மனிதநேயம் ஆகியவற்றை மதிக்கும் அனைவரும் இத்தகைய செயல்களை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *