மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தலுக்கான வேட்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுவிட்டனர். தற்போது வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தை மேற்கொள்ளும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய வேட்பாளர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு மத்திய புலனாய்வு முகமைகள் அடுத்தடுத்து சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றன.
தெற்கு கொல்கத்தாவின் முக்கிய தொகுதியான ராஷ்பிகாரியில் போட்டியிடும் தற்போதைய எம்.எல்.ஏ தேபாசிஷ் குமார், நில விற்பனை தொடர்பான முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையினரால் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

ஏற்கனவே கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜரான இவர், மீண்டும் வெள்ளிக்கிழமை சுமார் ஐந்து மணி நேரம் விசாரிக்கப்பட்டார். இது தொடர்பாக, “கட்சிதான் விளக்கம் அளிக்கும், நான் கருத்து கூற விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.
பல்வேறு நகராட்சிகளில் 2014 முதல் 2018 வரை நடைபெற்ற 1,500-க்கும் மேற்பட்ட பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகாரில், கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவின்படி விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் பிதான்நகர் தொகுதி வேட்பாளர் சுஜித் போஸ் ஏப்ரல் 6-ம் தேதியும், மத்யம் கிராம் தொகுதி வேட்பாளர் ரத்தின் கோஷ் ஏப்ரல் 8-ம் தேதியும் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.