சென்னை: இஸ்ரேல் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, பாலஸ்தீன மக்களின் அமைதி வாழ்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலஸ்தீன மக்கள் தங்கள் தாயக உரிமைக்காக பல பத்தாண்டுகளாக போராடி வருகின்றனர். ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்களின் பிரதிநிதியாக செயல்பட்ட பெருமைக்குரிய தலைவர் யாசர் அராபத், பாலஸ்தீன விடுதலை இயக்கம் மேற்கொண்டு வரும் விடுதலை இயக்கத்திற்கு ஆரம்ப நிலையில் இருந்து இந்தியா உறுதியான ஆதரவைத் தெரிவித்து வந்துள்ளது.
உலகிலேயே முதன்முதலாக பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரித்து, அதன் அலுவலகத்தை தூதரக தகுதியோடு தலைநகர் புதுடெல்லியில் அமைத்துக் கொடுத்தது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. பாலஸ்தீன நாட்டிற்கு 1988 ஆம் ஆண்டில் ஐநா அவையில் உள்ள 193 நாடுகளில் 157 நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளன.
இந்த நிலையில், பாலஸ்தீன இறையாண்மைக்கும், சுதந்திரத்திற்கும் ஊறு செய்து, அதன் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொள்ள இனவெறி பிடித்த இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் மீது வன் தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த 2023 அக்டோபர் மாதம், இஸ்ரேல் தொடங்கிய, இன அழிப்புத்தாக்குதலை இன்றுவரை, தொடர்ந்து நடத்தி வருகிறது இதன் காரணமாக 67 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அழித்தொழிக்கப்பட்டவர்களில் பெரும் பகுதி குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்பது ஆற்ற முடியாத துயரமாகும்.
தாயக உரிமைக்கு போராடி வரும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக உலக நாடுகள் ஒருங்கிணைந்து குரல் கொடுத்து வருகின்றன. ஆனால், அமெரிக்காவின் டிரம்ப் அரசு மட்டும் இஸ்ரேல் இனவெறி அரசுக்கு ஆதரவும், உதவியும் செய்து, பாலஸ்தீன மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்டு) தமிழ்நாடு மாநிலக் குழுவின் முன்னெடுப்பில், தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து, தலைநகர் சென்னையில் இஸ்ரேலை கண்டித்துள்ளதும், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு அரசின் முதல்வர், சட்டப் பேரவையில் இஸ்ரேலை கண்டித்து, தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவித்திருப்பதும் உலகளவிலான விடுதலை இயக்கங்களுக்கு ஊக்கம் அளிக்கும் செய்தியாகும்.
முதல்வரின் முன் முயற்சிகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதுடன், இஸ்ரேல் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை இந்திய ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என முதல்வரின் வேண்டுகோளை, தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வாக கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, பாலஸ்தீன மக்களின் அமைதி வாழ்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.