இஸ்ரேலுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, புதன்கிழமை (நேற்று) இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். 2017-க்குப் பிறகு இந்தியாவின் பிரதமர் பிரதமர் மோடி மேற்கொண்ட இரண்டாவது இஸ்ரேல் பயணம் இது.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் மோடி. அவர் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தபோது உறுப்பினர்கள் “மோடி, மோடி’ என முழக்கமிட்டு எழுந்து நின்று உற்சாக வரவேற்பளித்தனர். அதைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, “இஸ்ரேல் இந்தியாவால் முறையாக அங்கீகரிக்கப்பட்ட அதே நாளில்தான் நான் பிறந்தேன். இங்கு உரையாற்றுவது ஒரு சிறப்பு மற்றும் மரியாதை. இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவு இன்று நேற்று தொடங்கியதல்ல, இது 2000 ஆண்டுகளுக்கு மேலானது.
யூதர்களின் புனித நூல்களான ‘தால்முட்’ மற்றும் ‘எஸ்தர் புத்தகம்’ ஆகியவற்றில் இந்தியாவுடனான வணிகத் தொடர்புகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2023, அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. நாங்கள் உங்கள் வலியை உணர்கிறோம், துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். இந்தியா இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கிறது. மும்பை 26/11 தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாத ‘ஜீரோ டாலரன்ஸ்’ கொள்கையைக் கொண்டுள்ளது. காசா பகுதியில் நீடித்த அமைதியை ஏற்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளுக்கு இந்தியா தனது முழு ஆதரவை வழங்கும்.” என்றார்.