இஸ்ரேல் பிரதமரை மோடி பாராட்டியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது: செல்வப்பெருந்தகை | selvaperunthagai slams modi govt

1379315
Spread the love

சென்னை: இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் பாராட்டியிருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காசா பகுதியில் நடைபெற்று வரும் மனிதாபிமானமற்ற பேரழிவும், பாலஸ்தீன மக்கள் மீது நிகழ்த்தப்படும் இனப்படுகொலையும் உலகம் முழுவதும் கண்டனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் பாராட்டியிருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான அமைதி ஒப்பந்தத்தை வரவேற்பதாகவும், அது நெதன்யாகுவின் ‘சிறந்த தலைமையின் விளைவாகும்” என்றும் மோடி தனது ‘எக்ஸ்” தளத்தில் பதிவிட்டுள்ளார். இனப்படுகொலை செய்து ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள், அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்த நெதன்யாகுவை இவ்வாறு பாராட்டுவது, இந்தியாவின் பாரம்பரியமான மனிதநேய வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானது.

பாலஸ்தீன மக்களின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் இந்தியா 1988 ஆம் ஆண்டு முதலே அங்கீகரித்துள்ளது. அந்த வரலாற்று நிலைப்பாட்டை புறக்கணித்து, இனப்படுகொலை செய்த ஆட்சியாளரைப் புகழ்வது, அகிம்சையைப் போதித்த இந்தியாவிற்கு கடுமையான அவப்பெயரை உண்டாக்கும். இந்தியா மீது உலகநாடுகள் வைத்திருக்கும் நல்லெண்ணத்தைக் கெடுக்கும் செயலாகும்.

இந்தியாவின் குரல் எப்போதும் மனிதநேயம், அமைதி, நீதிக்காக இருக்க வேண்டும்; இனப்படுகொலை செய்த ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக அல்ல. எனவே, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடியின் செயலை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *