ஈரான் புதிய உச்ச தலைவர் பற்றி தகவல் கொடுத்தால் 10 மில்லியன் டாலர் பரிசு: அமெரிக்கா அறிவிப்பு   – Kumudam

Spread the love

பிப்ரவரி 28 அன்று போரின் போது கொல்லப்பட்ட முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மகன் மோஜ்தபா காமேனி உட்பட பல முக்கிய தலைவர்களை ‘ஈரானிய பயங்கரவாதத் தலைவர்கள்’ என்று குறிப்பிட்டு அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்ட எக்ஸ் பதிவிட்டுள்ளது. 

அந்த பதிவில் , “இந்த நபர்கள் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) பல்வேறு படைப்பிரிவுகளை கட்டளையிட்டு வழிநடத்துகிறார்கள். இது உலகம் முழுவதும் பயங்கரவாதத்தைத் திட்டமிடுகிறது.  இவர்களை பற்றிய தகுதியான தகவல்கள் அளித்தால் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை பரிசு  அளிக்கப்படும். இது நீதிக்கான வெகுமதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மிகப்பெரிய பரிசுகளில் ஒன்றாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோமாவில் மோஜ்தபா கமேனி ? பிரிட்டன் தகவல்

கமேனி உயிரிழந்த அதே தாக்குதலில், அவரது மகன் மோஜ்தபா கமேனியும் படுகாயமடைந்து கோமா நிலையில் இருப்பதாக, ஐரோப்பிய நாடான பிரிட்டன் பத்திரிகையான, ‘சன்’ செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், அவரையே உச்ச தலைவராக மத குருக்கள் தேர்வு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்ட மோஜ்தபா கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டு வான் தாக்குதலில் படுகாயமடைந்து கோமா நிலையில் இருக்கிறார். இருப்பினும், மத குருமார்கள் அவரையே உச்ச தலைவராக நியமித்துள்ளனர்.

அவருக்கு ஒரு கால் துண்டிக்கப்பட்டதுடன், கல்லீரல் பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது டெஹ்ரானில் உள்ள சினா மருத்துவ பல்கலை மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமிய புரட்சிகர ராணுவ படையின் பிரிவுகள் தனித்தனி கட்டுப்பாட்டில் செயல்பட்டு, போர் நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அமெரிக்க 5 போர் விமானங்கள் சேதம் 

சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப் படை தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. அப்போது, அந்த தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க விமானப் படையின் எரிபொருள் நிரப்பும் 5 டேங்கர் விமானங்கள் சேதமடைந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், பகுதியளவு சேதமடைந்த அமெரிக்க டேங்கர் விமானங்களை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *