ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக அமெரிக்காவின் நட்பு நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு எதிர்த்தாக்குதல்களும் நடந்துவருகின்றன. அதனால் மத்தியக் கிழக்கு நாடுகள் போர் பதற்றத்தில் இருக்கின்றன. இந்த நிலையில், நேற்று இந்தியப் பெருங்கடலில் இருந்த ஈரான் போர்க் கப்பல் மீது அமெரிக்கா தக்குதல் நடத்தியதும் போர் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.
இதற்கிடையில், அமெரிக்காவின் முன்னாள் கர்னல் டக்ளஸ் மேக்ரிகோர் அமெரிக்கா செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “எங்கள் தளங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. எங்கள் துறைமுக நிறுவல்கள் அழிக்கப்பட்டுள்ளன.
நாங்கள் உண்மையில் இந்தியா மற்றும் இந்திய துறைமுகங்களை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. இது சிறந்த முன்னெடுப்பல்ல எனக் கடற்படை சொல்கிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
ராணுவ கர்னலின் இந்த தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்திருக்கிறது. வெளியுறவு அமைச்சக உண்மை சரிபார்ப்பு பக்கம், “அமெரிக்க கடற்படையால் இந்திய துறைமுகங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு சேனலான OAN இல் கூறப்படும் கூற்றுக்கள் போலியானவை, தவறானவை. இது போன்ற ஆதாரமற்ற மற்றும் ஜோடிக்கப்பட்ட கருத்துகளுக்கு எதிராக எச்சரிக்கிறோம்” என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.