அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கெடு விதித்த மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அக்கட்சியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் தவெக-வில் இணைந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், 2020-இல் செங்கோட்டையனுடன் முரண்பாடு ஏற்பட்டு அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைந்த, அவரது சொந்த அண்ணன் மகனான கே.கே.செல்வம், இன்று திமுக-வில் இருந்து விலகி மீண்டும் அதிமுக-வில் இணைந்துள்ளது ஈரோடு மாவட்ட அரசியலில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோபிசெட்டியபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தைச் சேர்ந்தவர்தான் கே.கே.செல்வம். செங்கோட்டையனின் சொந்த அண்ணன் மகனான இவர், சிறுவயதிலிருந்தே தனது சித்தப்பாவுடன் சேர்ந்து அதிமுக-வில் பயணித்து வந்தார்.
அவருக்கும் செங்கோட்டையனுக்கு இடையே 2020-இல் ஏற்பட்ட முரண்பாட்டால், அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைந்தார். திமுக-வில் செல்வத்துக்கு ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, இரண்டு நாள்களுக்கு முன்னதாக அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செல்வத்தை திமுக தலைமை நீக்கியது.

செல்வம் திடீரென நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன எனக் கட்சியின் சீனியர்களிடம் விசாரித்தோம். “செங்கோட்டையனிடம் முரண்பாடு ஏற்பட்டுதான் திமுக-வுக்கு செல்வம் வந்தார். அவருக்கு ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இருந்தாலும், அதிமுக மீதான பழைய பாசம் விட்டுப்போகவில்லை.
திமுக-விலும் கட்சி வேலைகளில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில்தான், தனது சொந்த சித்தப்பாவான செங்கோட்டையன் அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனால், கோபிசெட்டிபாளையம் அதிமுக-வில் ஒரு வெற்றிடம் உருவானது. செங்கோட்டையன் இடத்தைப் பிடிக்க திட்டமிட்ட செல்வம், அதிமுக மண்டலப் பொறுப்பாளரான எஸ்.பி.வேலுமணியைச் சந்தித்து, தான் மீண்டும் அதிமுக-வில் இணையும் விருப்பத்தைத் தெரிவித்தார்.