ஈரோடு கிழக்கில் 46 வேட்பாளர்கள் – நள்ளிரவில் ஒரு வேட்புமனு தள்ளுபடி | 46 candidates in Erode East one independent nomination rejected

1347743.jpg
Spread the love

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த பெங்களூருவைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்புமனு நேற்று நள்ளிரவில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, ஈரோடு தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 46 ஆக குறைந்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 58 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்னர். இதில், 3 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 55 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலை இருந்தது. இதில் ஏழு சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் ஒரு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சியின் மாற்று வேட்பாளர் என மொத்தம் எட்டு வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். இதன்தன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 47 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடந்தது. இதன்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சியான திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்ட மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடந்தது.

சுயேட்சை வேட்பாளர்கள் எதிர்ப்பு: இப்பணியின்போது, கர்நாடக மாநிலம் பெங்களூரு, கே.ஆர்.புரம் சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த வி.பத்மாவதி என்ற சுயேட்சை வேட்பாளின் மனு ஏற்கப்பட்டதற்கு, சுயேட்சை வேட்பாளர்கள் நூர் முகமது, அக்னி ஆழ்வார், பத்மராஜன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு எந்த மாநிலத்தில் இருந்தும் வேட்பாளராக போட்டியிடலாம். ஆனால், சட்டப்பேரவைத் தொகுதிக்கு அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் மட்டுமே போட்டியிட முடியும் என போராட்டத்தில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கராவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த அவர், ஆலோசனை மேற்கொண்டார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் நள்ளிரவு வரை வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் பெங்களூருவைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 46 ஆக குறைந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *