‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளிலும் வாகன பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், பவானி தொகுதியில் நேற்றிரவு உரை நிகழ்த்தியிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு அதிக எண்ணிக்கையில் மக்களைத் திரட்டும் முயற்சியாக கூட்டத்தில் பங்கேற்கும் நபர்களுக்குக் குலுக்கல் முறையில் தங்க நாணயம் வழங்கப்படும் என அறிவித்ததுடன் அதற்கான டோக்கனையும் கூட்டம் தொடங்கும் முன்னரே விநியோகம் செய்திருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமியின் உரை நிறைவடைந்ததும் குலுக்கல் நடத்தப்படும் என அறிவித்திருந்த நிலையில், கூட்டம் நிறைவடைந்ததும் தங்க நாணயத்திற்கான குலுக்கல் நடைபெறும் என மக்கள் இரவு நீண்ட நேரமாக கையில் டோக்கனுடன் காத்திருந்துள்ளனர்.
கூட்டம் முடிந்ததும் குலுக்கல் முறையில் 10 நபர்களைத் தேர்வு செய்து அரை கிராம் தங்க நாணயத்தைப் பெற அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட டோக்கன்களை வென்ற 10 நபர்களும் கூட்டம் முடியும் முன்னரே பாதியில் வெளியேறியிருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது.

சம்மந்தப்பட்ட நபர்களை அழைத்து தங்க காசுகள் வழங்கப்படும் என அ.தி.மு.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு தங்க நாணயம் வழங்கப்படும் என டோக்கன் விநியோகம் செய்த நிகழ்வு அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.