தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன், தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சி இணையும் விழா ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில், தமிழருவி மணியன் பேசுகையில், “காங்கிரஸை விட்டு ஜி.கே.வாசன் வந்ததால், அவருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஏனென்றால் சத்தியமூர்த்தி பவனில் இருப்பது காங்கிரஸ் கட்சி அல்ல. அதுஒரு லிமிடெட் கம்பெனி.
இங்கிருக்கும் காங்கிரஸ் கமிட்டிக்கு ஏதாவது அதிகாரம் உண்டா?. மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை நினைத்தால் ஒரு வார்டு கவுன்சிலரைக் கூட அவரால் நிற்க வைக்க முடியாது. அதற்கும்கூட சோனியாகாந்தியிடம் அனுமதி பெற்றுவிட்டுதான் வர வேண்டும்.
மானமுள்ள கதர் சட்டை போட்ட காங்கிரஸ்காரர்கள் ஜி.கே.வாசன் பக்கம்தான் வர வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு மாற்று அரசியலை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதற்காக மூன்று ஆண்டுகள் ரஜினியிடம் வாரத்துக்கு மணிக்கணக்கில் அரசியல் பேசியுள்ளேன்.
அந்த மூன்று ஆண்டுகளில் ரஜினியிடம் நான் பெற்றது மூன்று கோப்பை மிளகு ரசம் மட்டுமே. நான் யாரிடமும் எதையும் எதிர்பார்த்து செல்கிறவன் அல்ல.

கடந்த தேர்தலின்போது திமுக-வுக்கு வாக்களித்தால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் என்று சொன்னேன். அது தற்போது நடந்ததா? இல்லையா? தவெக தலைவர் விஜய்க்கு ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன்.
விஜய் நன்றாகச் சிந்திக்க வேண்டும். அவருக்கென்று ஒரு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. ஒரு இளைய தலைமுறை கண்ணை மூடிக்கொண்டு அவர் பின்னால் செல்கிறது. அவர் பின்னால் அணி திரள்பவர்களைக் கணக்கெடுத்து பார்த்தால் வரும் தேர்தலில் தவெக 20 சதவீத வாக்குகளை உறுதியாகப் பெறும்.