அதிமுகவில் ஏற்பட்ட முரண்பாட்டால் அக்கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மூத்த நிர்வாகி செங்கோட்டையன், தவெகவில் அண்மையில் இணைந்தார்.
தவெகவில் அவருக்கு கட்சியின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, மேற்கு மண்டலத்தில் தவெகவை வளர்க்கும் பணியில் செங்கோட்டையன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அதிமுகவில் தன்னுடைய ஆதரவாளர்களாக இருந்தவர்கள் மற்றும் அக்கட்சி நிர்வாகிகளை தவெகவில் இணைப்பதில் முனைப்புக் காட்டி வருகிறார்.
தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் ஈரோட்டில் தவெக தலைவர் விஜயை அழைத்து வந்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக, ஈரோடு மாவட்டம் பவளத்தான்பாளையத்தில் டிசம்பர் 16ஆம் தேதி விஜய் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு, அதற்காக ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டக் காவல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், பவளத்தான்பாளையத்தில் இடம் குறுகியதாக இருப்பதால் அங்கு பொதுக்கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் அனுமதி மறுத்தன.

பொதுக்கூட்ட தேதி, இடம் மாற்றம்:
இதையடுத்து, வேறு இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த செங்கோட்டையன் முடிவு செய்தார். அதற்காக, பெருந்துறை அருகே விஜயமங்கலம் சரளையில் 29 ஏக்கரில் டிசம்பர் 18ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு பொதுக்கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகத்திடமும், மாவட்ட காவல் துறையிடமும் அனுமதி கோரி கடிதம் அளிக்கப்பட்டிருந்தது.