ஈரோட்டில் புதிய ரயில் நிலையம் அமைக்க தமாகா கோரிக்கை | TMC seeks for more trains services in Erode

1311929.jpg
Spread the love

சென்னை: ஈரோட்டில் புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என தமாகா பொதுச் செயலாளர் எம்.யுவராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் மாநகரங்களில் ஒன்றாக ஈரோடு உள்ளது. பிரபலமான தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் இங்கு உள்ளன. தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஈரோடு வந்து செல்கிறார்கள். மஞ்சள், ஜவுளிக்கு பிரசித்தி பெற்ற ஈரோட்டுக்கு ஜவுளி பொருட்கள் வாங்குவதற்காக அனைத்து பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்கிறார்கள்.

இதனால் ஈரோடு போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. ஈரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுற்றுவட்டச்சாலை (ரிங்ரோடு) அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலையும் 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்தே காணப்படுகிறது.

தற்போது ஈரோடு பஸ் நிலையத்தில் நெரிசலை குறைக்க கூடுதலாக புறநகர் பஸ் நிலையங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. முதல் கட்டமாக சோலார் பகுதியில் புறநகர் பஸ் நிலையம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. சுமார் 2 ஆண்டுகள் ஆகியும் பணிகள் முடியவில்லை. இந்த பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.

அத்துடன் சோலார் பஸ் நிலையம் அருகே புதிதாக ரயில் நிலையம் அமைக்கவும் மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஸ் நிலையத்தை ஒட்டி ரயில் நிலையம் அமைவது அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் உள்ளதாக அமையும். இங்கு புதிதாக இடம் கையகப்படுத்தும் பணி, தண்டவாளங்கள் அமைக்கும் பணி என எதுவும் புதிதாக செய்ய வேண்டியது இல்லை. பஸ் நிலையத்திற்கு மிக அருகில் ரயில் தண்டவாளம் உள்ளது. அங்கு சிறிய ரயில் நிலையம் அமைப்பதற்கான இடவசதியும் உள்ளது. எனவே ரயில் நிலையம் அமைப்பது கட்டாயமாகும்.

இதுபோல் ஈரோடு ரயில் நிலையத்தில் கூடுதல் பிளாட்பார வசதி செய்ய வேண்டும். தொட்டியபாளையம் ரயில் நிலையத்தை மேம்படுத்தி அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் அனைத்து மக்களும் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்து கூடுவது தவிர்க்கப்படும். ரங்கம்பாளையம் பகுதியில் பயணிகள் ரயில் நிலையம் புதிதாக அமைக்க வேண்டும்.

இதுதொடர்பாக மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோட்டில் உள்ள அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இது தொடர்பாக சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *