சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று காலமானார். அவருக்கு வயது 76. அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக காய்ச்சல், சளி, மூச்சுதிணறல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 13-ம் தேதி சேர்க்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கடுமையான நுரையீரல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து. தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் உடல்நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த சூழலில், முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் 28-ம் தேதி மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று அதிகாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பல்துறை மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை 10.19 மணிக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார். மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரித்வி மோகன்தாஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர், மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்துக்கு உடல் எடுத்து செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இளங்கோவனின் மனைவி வரலட்சுமி, இளைய மகன் சஞ்சய் சம்பத் உள்ளிட்டோருக்கு ஆறுதல் கூறினார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், எம்.பி. தயாநிதி மாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, மூத்த தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன். அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
இன்று மாலை உடல் தகனம்: முக்கிய பிரமுகர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள். பொதுமக்கள் இன்றும் இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். மாலை 4 மணி அளவில் முகலிவாக்கம் எல் அண்ட் டி காலனி பகுதியில் உள்ள மின் மயானத்தில் இளங்கோவன் உடல் தகனம் செய்யப்படுகிறது. ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும். தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளங்கோவன் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: நேர்மையாகவும், தைரியமாகவும் கருத்துகளை தெரிவித்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்காக, தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்.
ராகுல் காந்தி: கொள்கை பிடிப்புள்ள துணிச்சலான தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். காங்கிரஸின் மதிப்புகள் மற்றும் பெரியாரின் கொள்கைகளுக்கான உறுதியான ஆதரவாளராக இருந்தவர். அவர் ஆற்றிய சேவைகள் என்றென்றும் தமிழக மக்களுக்கு உத்வேகம் அளிக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.