ஈஷா மஹாசிவராத்திரி விழா மகத்தான வெற்றிபெற பிரதமர் மோடி வாழ்த்து | Isha Yoga Center reports that Prime Minister Modi has extended his greetings on the occasion of Mahashivratri.

1351912.jpg
Spread the love

கோவை: ஈஷா மஹாசிவராத்திரி விழா மகத்தான வெற்றியடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளதாக கோவையில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கோவை ஈஷா யோக மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை ஈஷா யோக மையத்தில் சத்குருவின் தலைமையில் நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா மகத்தான வெற்றியடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமரின் இந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள சத்குரு மஹாசிவராத்திரியின் மகத்துவத்தை அனைவரும் உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பிரதமரின் வாழ்த்து கடிதத்தில், ”கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2025-ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தின் மங்களகரமான நிகழ்வில் ஈடுபட்டுள்ள ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த அனைவருக்கும் சிவபெருமானின் எண்ணற்ற பக்தர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். விமரிசையாக கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான மஹாசிவராத்திரி, ஆன்மீக ரீதியில் நம்மை மேன்மைபடுத்தும் தன்மைக்காக அதன் மீதான ஆழ்ந்த பக்தியையும், மதிப்பையும் ஏற்படுத்துகிறது. இவ்விழா விரதம், தியானம் மற்றும் சுயபரிசோதனைக்கான தருணமாகவும், அறியாமையின் மீதான அறிவின் வெற்றியையும் குறிக்கிறது.

மஹாசிவராத்திரி என்ற பெயரே குறிப்பிடுவது போல, சிவபெருமான் மற்றும் அன்னை பார்வதியின் திருமணம் நடைபெற்ற மகத்தான இரவு – இதுவே சிவன் மற்றும் சக்தியின் பிரபஞ்ச சங்கமாகும். மஹாசிவராத்திரி நாளில் பக்தி, பிரார்த்தனைகள் மற்றும் சுய கட்டுப்பாடு மூலம் பக்தர்கள் ஆன்மீக ரீதியாக முன்னேறவும், அதே போல் உயர்ந்த தெய்வீக சக்தியுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று பரவலாக நம்பப்படுகிறது. மஹாசிவராத்திரி போன்ற பண்டிகைகள் புவியியல், கலாச்சாரம், காலம் மற்றும் இடம் ஆகியவற்றின் தடைகளைத் தாண்டி, மனிதகுலத்தை உள் அமைதி, சமநிலை மற்றும் நல்லிணக்கத்தின் பொதுவான புள்ளியில் இணைக்கின்றன. இது இயற்கையின் மீதான மதிப்பை வளர்த்து, அதனுடன் அமைதியான சகவாழ்வு வாழ்வதற்கான செய்தியையும் கற்பிக்கின்றது.

மேலும் நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆதியோகி சிலைகளை நிறுவும் முயற்சியைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பக்தர்களை விழிப்புணர்வு மற்றும் உயர்ந்த உணர் நிலைகளை வளர்ப்பதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள சிவபெருமானின் உன்னதமான வடிவம் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும். மனிதகுலத்தின் மீது அவரது ஆசீர்வாதங்களைப் பொழிவதற்காக சிவபெருமானின் தெய்வீக பாதங்களில் பிரார்த்தனைகளுடன், சத்குரு அவர்களின் தலைமையில் நடைபெறும் 2025 ஈஷா மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் மகத்தான வெற்றியாக அமையட்டும்.” என கூறப்பட்டு உள்ளது.

இதற்கு நன்றி தெரிவித்து சத்குரு அவர்கள் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் ”உங்களது அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி. பாரதத்தின் மிக முக்கியமான விழாக்களில் ஒன்றான மஹாசிவராத்திரியின் மகத்துவத்தை அனைவரும் உணர வேண்டும். இந்த நாகரிகத்தின் உருவாக்கத்திற்கும் மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கும் ஆதியோகியின் பங்களிப்பு எத்தகையது என்றால் அவர் கடந்த காலத்தின் சின்னமாக இல்லாமல், எதிர்கால தலைமுறையினருக்கு நல்வாழ்வு மற்றும் அதனையும் தாண்டி செல்வதற்கு மேலே தேடாமல் உள்நோக்கி தேடுவதற்கான தூண்டுதலாய் இருப்பார். மனித அனுபவங்கள் அனைத்துக்குமான மூலம் நமக்குள் உள்ளது. மனித பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் அனைத்துக்குமான தீர்வுகளும் நமக்குள் உள்ளன. இதுவே ஆதியோகியின் பங்களிப்பின் அடிப்படை. மேலும் இயல்பாகவே இது இந்த உலகின் எதிர்காலமாகவும் அமையும். மீண்டும் ஒருமுறை மிக்க நன்றி” என கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *