மாஸ்கோ: உக்ரைனில் 30 நாள் போா் நிறுத்தத்துக்கு ரஷிய அதிபர் புதின் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார்.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக சௌதி அரேபியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின், உக்ரைனில் முதல்கட்டமாக 30 நாள் போா் நிறுத்தத்துக்கு உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து, ரஷியா ஒப்புக் கொண்டால், போர்நிறுத்தம் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேற்கண்ட ஒப்பந்தத்துக்கு வியாழக்கிழமை(மார்ச் 13) ரஷிய அதிபர் புதின் பல்வேறு நிபந்தனைகளுடன் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
ரஷிய அதிபர் மாளிகையில் செய்தியாளர்களுடன் பேசிய புதின், ‘அமெரிக்காவின் தலையீடால் கொண்டு வரப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரஷியா ஏற்றுக்கொள்வதாகவும், அதேநேரத்தில், எந்தவொரு போர் நிறுத்தமும் நீடித்த அமைதிக்கான அஸ்திவாரமாக இருக்க வேண்டுமெனவும்’ குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவ்விவகாரத்தில் பல்வேறு பிரச்சினைகளில் என்ன நிலைப்பாடு எடுக்கப்படவுள்ளது என்பதை விரிவாக ஆராய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அமைதியை நிலைநாட்ட முனைப்பு காட்டி வருவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு பாராட்டுகளையும் புதின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர்:
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு படையெடுத்து, கிழக்கு உக்ரைன் பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.
இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ராணுவ உதவிகளைச் செய்துவந்தன. இந்தச் சூழலில், அமெரிக்காவின் அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று உக்ரைனை வலியுறுத்திவருகிறாா். அதன் தொடா்ச்சியாக சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் 30 நாள் போா் நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புக் கொண்டுள்ளது.
உக்ரைனின் போா் நிறுத்த அறிவிப்பை ஏற்பது குறித்து ரஷிய தரப்பு முடிவு செய்யாமல் இருந்து வந்த நிலையில், இதனை வரவேற்கும் விதமாக ரஷிய அதிபர் புதின் பேசியிருப்பது, உக்ரைனில் போர் நிறுத்தம் விரைவில் ஏற்படும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது.