இத்தாலியில் ஜி7 உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள 3-வது முறையாக பிரதமர் பதிவி ஏற்று உள்ள மோடி சென்று உள்ளார். ஜி7 உச்சி மாநாட்டுக்கு இடையே, பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியுடன் இன்று (14 -ந்தேதி) சந்தித்து இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது 3வது முறையாக பிரதமராகப் பதவியேற்றுள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
உக்ரைனில் அமைதி தீர்வு
பின்னர் இரு தலைவர்களும் நடத்திய பேச்சு வார்த்தையின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. உக்ரைன் நிலவரம் குறித்தும், சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள அமைதிக்கான உச்சி மாநாடு குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
பேச்சுவார்த்தை மற்றும் ராஜிய ரீதியிலான நடைமுறைகள் மூலம் உக்ரைன் மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதை இந்தியா தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். அமைதித் தீர்வுக்கு தனது சக்திக்குட்பட்ட அனைத்து விஷயங்களையும் இந்தியா தொடர்ந்து செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உறுதியளித்து உள்ளார்.இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.
இங்கிலாந்து பிரதமர்
இதேபோல் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார்.இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதி செய்தனர்.2030 ஆம் ஆண்டை நோக்கிய செயல்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விவாதித்த அவர்கள், வழக்கமான உயர்நிலை அரசியல் ஆலோசனைகள், ராணுவம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, உயர் தொழில்நுட்பத் துறைகள் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்டவை குறித்தும் இந்த அம்சங்களில் இருதரப்பு ஒத்துழைப்பில் முன்னேற்றம் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
இரு நாடுகளுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
மேலும் அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு தயாராகி வரும் அந்நாட்டு மக்களுக்கு பிரதமர்நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
பிரான்ஸ் அதிபர்
பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் ‘ஹொரைசன் 2047’ செயல்திட்டம் மற்றும் இந்தோ-பசிபிக் செயல்திட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்தியா-&பிரான்ஸ் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி, கல்வி, பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, போக்குவரத்து இணைப்பு மற்றும் தேசிய அருங்காட்சியகம் தொடர்பான கூட்டு செயல்பாடு மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துதல் போன்றவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து அவர்கள் விவாதித்தனர். பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்தவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
செயற்கை நுண்ணறிவு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், எரிசக்தி மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
நுண்ணறிவு உச்சி மாநாடு
2025-ம் ஆண்டில் பிரான்சில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு மற்றும் ஐநா பெருங்கடல் மாநாடு ஆகியவை தொடர்பாக இருநாடுகளும் இணைந்து பணியாற்றவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.நிலையான மற்றும் வளமான உலக அமைப்பிற்கு இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான வலுவான மற்றும் நம்பகமான உத்திசார் கூட்டு செயல்பாடு முக்கியமானது என்று அவர்கள் வலியுறுத்தினர். அப்போது பாரீஸில், ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறுவது தொடர்பாக அதிபர் மெக்ரோனுக்கு,பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: