”உங்களுக்கும் சேர்த்துதான் தமிழகம் போராடுகிறது” – அண்ணாமலைக்கு சசிகாந்த் செந்தில் பதில் | annamalai and sasikanth senthil words sparks controversy

1353670.jpg
Spread the love

சென்னை: மும்மொழி கொள்கை விவகாரம் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், “உங்களுக்கும் சேர்த்து தான் இந்த தமிழ்நாடு போராடுகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அண்ணாமலை” என காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் காட்டமாக தெரிவித்துள்ளார்.

மும்மொழி கொள்கை விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் இடையே வார்த்தை மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்நிலையில், இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “தமிழக முதல்வர் தொடங்கி, திமுக மற்றும் ஒட்டு மொத்த இந்தி கூட்டணிக் கட்சி எம்பிக்கள் அனைவருமே பொய் சொல்வதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

இந்தி மொழி தெரியாததால்தான் தமிழ் மாணவர்கள் UPSC தேர்வுகளில் தேர்ச்சி பெறவில்லை என்று நான் கூறியதாக சசிகாந்த் செந்தில் பொய் கூறியிருக்கிறார். அரசு உயர் பதவி வகித்த ஒருவர், அரசியலுக்காக இப்படி இணைய திமுக கைக்கூலிகள் போல் போலிச் செய்திகளைப் பரப்பும் அளவுக்குத் தரம் இறங்கியிருப்பது வருத்தமளிக்கிறது. நான் பேசிய காணொளியை இத்துடன் இணைத்திருக்கிறேன்.

தமிழகத்தில் இருந்து கிராமப்புற மாணவர்கள் UPSC தேர்வில் தேர்ச்சி பெறும் சதவீதம் குறைந்திருக்கிறது என்பது உண்மைதான். அதற்குக் காரணம், திமுக காங்கிரஸ் கூட்டணி, தாங்கள் நடத்தும் தனியார் பள்ளிகளை முன்னிறுத்தி, அரசுப் பள்ளிகளைச் செயலிழக்கச் செய்திருப்பதுதானே தவிர, மத்திய அரசு காரணமல்ல.

கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சி குறைந்திருப்பதை ஒப்புக்கொள்ளும் சசிகாந்த் செந்தில், தமிழக அரசுப் பாடத்திட்டம், தனியார் பள்ளிகள் பாடத்திட்டத்தைப் போல தரமானவை இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறாரா? தேசியக் கல்விக் கொள்கை மூலம் தரமான கல்வி தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைப்பதை, அவர் இனியாவது ஆதரிப்பார் என்று நம்புகிறோம்” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், அண்ணாமலைக்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் தனது எக்ஸ் தளத்தில், “லெப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல திரும்புற கதை எல்லாம் இங்க வேண்டாம் மெத்தப் படித்த அண்ணாமலை அவர்களே, நான் உங்களிடம் UPSC-CSAT தேர்வு குறித்து நியாயமாக கேட்ட எந்த கேள்விக்கும் உங்களால் பதில் அளிக்க முடியவில்லை. அதனால் தான் ரிவர்ஸ் கியர் போட்டு என்னென்னமோ பேசி கொண்டிருக்கிறீர்கள், இதன் மூலம் நான் கேட்ட அனைத்து நியாயமான கேள்விகளையும் நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்கள் என்று நான் எடுத்துக் கொள்ளலாமா? அதற்கு நீங்களும் உங்கள் தலைமையும் தான் தமிழ்நாடு மக்களிடம் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

UPSC -CSAT தேர்வின் மூலம் நடத்தப்படும் அநீதிக்கு தமிழ்நாடு மாணவர்களிடம் உங்களால் மன்னிப்பு கேட்க முடியுமா? இந்த தேர்வினால் எலைட் கோச்சிங் சென்டர் மட்டுமே பயன் அடைகிறது. ஆனால் ஒரு புறம் பல லட்சக்கணக்கான கிராமப்புற மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு உங்களால் மன்னிப்பு கேட்க முடியுமா? உங்களின் நீட் தேர்வு திணிப்பால் தமிழ்நாட்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அவர்களின் மரணத்திற்கு நீங்கள் என்ன பதில் சொல்ல போகிறீர்கள், அவர்களிடம் எப்போது நீங்கள் மன்னிப்பு கேட்க போகிறீர்கள்?

சரி நீங்கள் தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டு வர வேண்டும் என பேசுகிறீர்கள். அதை உங்கள் ஒன்றிய அமைச்சர் ஒப்புக் கொள்வாரா? அதை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவாரா? குறிப்பாக பிஜேபி ஆளும் மாநிலங்களில் (Double Engine Sarkar States) அதை முதலில் செயல்படுத்த முடியுமா? அப்படி இருக்க தமிழ்நாட்டில் மட்டும் இது கட்டாயமாக செய்ய வேண்டும் என நீங்கள் சொல்வதற்கு காரணம் என்ன?

ஒன்றிய அமைச்சர்கள், பாஜக எம்பிகள் பாஜக முதலமைச்சரின் மகன்கள் / மகள்களில் எத்தனை பேர் நீங்கள் சொல்லும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளியில் படிக்கிறார்கள் என்பதை உங்களால் சொல்ல முடியுமா? அவர்கள் அனைவரும் சர்வதேச பள்ளிகள் வெளிநாடு பல்கலைக்கழகங்களில் படிக்கின்றனர் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

இந்தியாவிலேயே சிறந்த கல்வி கொள்கையை கொண்ட மாநிலமாக, பள்ளி மாணவர் சேர்க்கை; உயர்கல்வியில் சேர்க்கை என அனைத்திலும் முன்மாதிரியான மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்ற ஒரு கல்விக் கொள்கையை அழித்துவிட்டு மிக மோசமாக செயல்படும் கல்விக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என நீங்கள் சொல்வது எனக்கு வேடிக்கையாக உள்ளது. எப்படி நீங்கள் 20 ஆயிரம் புத்தகம் படித்த பின்பும் இப்படியான யோசனை சொல்ல முடிகிறது என எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது?

அதேபோல CUET தேர்வின் உண்மையான நோக்கம் என்ன? மத்திய பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மையாக ரிசர்வேஷன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தினார்கள், ஆனால் தற்போது ஸ்டேட் போர்டு மாணவர்களை புறம் தள்ளும் விதமாக தான் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த தேர்வினால் பயன் அடைபவர்கள் பயிற்சி மையங்கள் நடத்துபவர்கள் மட்டுமே. அது ஒருநாளும் அரசாங்க பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்கள் கிடையாது என்பதுதான் உண்மை.

இப்போது மீண்டும் கேட்கிறேன் என்னுடைய கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். தமிழக மாணவர்கள் ஒன்றிய அரசினால் கொண்டுவரப்பட்ட தவறான கல்வி கொள்கை முறையில் ஏன் ஏற்க வேண்டும்? ஏன் தமிழக பாஜகவினர் தேசிய அளவில் நடைபெறும் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் படும் கஷ்டங்கள் பற்றி பேச மறுக்கின்றனர்?

அதேபோல பாஜக அரசாங்கத்தினால் கொண்டு வரப்படும் தேர்வு கொள்கைகள் ஏன் இந்தி பேசும் மாநிலத்திற்கு ஏதுவாக அமைகிறது மற்றும் வசதி படைத்த, சமூகத்தில் முன்னேறிய குடும்பத்தைச் சார்ந்த நகர்ப்புற மாணவர்களுக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கும் படியான கொள்கைகளை கொண்டு வருகிறது?

உண்மையிலேயே உங்களுக்கு மாணவர்களின் நலனில் அக்கறை இருந்தால் தமிழர் விரோத தேர்வுகளால் நடத்தப்படும் அநீதிகளுக்கு எதிராக தமிழ்நாடு மாணவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புங்கள். உறுதியாக சொல்கிறேன் தமிழ்நாடு தனது முன்னேற்றமான கல்வி முறையை என்றும் பாதுகாக்க தொடர்ந்து போராடும். உங்களுக்கும் சேர்த்து தான் இந்த தமிழ்நாடு போராடுகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *