'உங்கள் உடல் steady-ஆக இருக்கிறதா?' தெரிந்துகொள்ள ஒற்றைக்காலில் நில்லுங்கள்! |#Flamingo balance test

Spread the love

சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக டிரெண்டாகி வருகிறது ‘ஃபிளமிங்கோ பேலன்ஸ் டெஸ்ட்’ (Flamingo balance test).

வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களுக்கு ஒற்றைக்காலில் நின்றிருப்பீர்கள், வென்றிருப்பீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை அறிந்துகொள்ளவும் ஒற்றைக்காலில் நின்று பாருங்களேன் என்பதுதான் இந்த ‘ஃபிளமிங்கோ பேலன்ஸ் டெஸ்ட்’டின் அறிவுறுத்தல்.  

ஃபிளமிங்கோ (Flamingo) என்பது நீண்ட கழுத்தையும், மிக நீண்ட மெல்லிய கால்களையும் கொண்ட  நீர்வாழ் பறவை இனம். தமிழில் இதை ‘பூநாரை’ என்று சொல்வார்கள். 

இந்தப் பறவைகள் எப்போதும் ஒற்றைக் காலில் நிற்பதை வழக்கமாக வைத்திருக்கும். அந்த அடிப்படையில்தான் இந்த டிரெண்டுக்கு ‘ஃபிளமிங்கோ பேலன்ஸ் டெஸ்ட்’  என்று பெயர் வைத்திருக்கிறார்கள். 

 ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்
ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்

நிலைதடுமாறாமல் அல்லது கீழே விழாமல் ஒரு நபரால் எவ்வளவு நேரம் ஒற்றைக்காலில் நிற்க முடிகிறது என்பதைக் கண்டறியும் இந்த டெஸ்ட்,  ஆரம்பத்தில், விளையாட்டுத்துறையினர் மற்றும் முதியோர்களுக்கான மருத்துவப் பரிசோதனைகளில்தான் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. 

சமீபகாலமாக மக்கள் மத்தியில் பரவலாகச் செய்துபார்க்கப்படுகிற சுய பரிசோதனையாக இது மாறிவருகிறது. நமது உடலின் பேலன்ஸ், அதாவது சமநிலையைத் தெரிந்துகொள்வதற்கான சோதனை இது. 

நமது உடலும் மூளையும் எந்த அளவு ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்பதைக் காட்டும்  அளவுகோல்தான் பேலன்ஸ் அல்லது சமநிலை. செலவே இல்லாமல் சிம்பிளாகச் செய்துபார்க்கிற இந்த  ‘ஃபிளமிங்கோ பேலன்ஸ் டெஸ்ட்’  உண்மையிலேயே சரியானதுதானா… தேவைதானா… எப்படிச் செய்ய வேண்டும்?

சென்னையைச் சேர்ந்த, ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜிடம் பேசினோம்.

”புதிதாக ஜிம்மில் சேர்வோருக்கு, ‘சிங்கிள் லெக் ஸ்டாண்டிங்’ (Single Leg standing) என்ற சோதனையைச் செய்வோம். அந்த நபரை குறிப்பிட்ட நொடிகளுக்கு ஒற்றைக்காலில் நிற்கச் சொல்லி, அவரது உடலின் பேலன்ஸ் எப்படியிருக்கிறது என்று பார்ப்போம். அதுதான் இப்போது வைரலாகிவருகிற  ‘ஃபிளமிங்கோ பேலன்ஸ் டெஸ்ட்’.

ஒற்றைக்காலைத் தூக்கிக் கொண்டு, கண்களை மூடியபடி நிற்கச் சொல்லி, அந்த நபரின் எந்தப் பகுதி அதிக ஸ்ட்ராங்காக இருக்கிறது, அவரால் பேலன்ஸ் செய்ய முடிகிறதா என்று பார்ப்போம்.

ஒருவரது உடலின் சமநிலையைத் தெரிந்துகொள்ளும் இந்த டெஸ்ட் சரியானதுதான்” என்பவர், உடலின் பேலன்ஸ் ஏன் முக்கியம்,  ‘ஃபிளமிங்கோ பேலன்ஸ் டெஸ்ட்’டை மேற்கொள்வது எப்படி என்பன உள்ளிட்ட பல தகவல்களையும் பகிர்கிறார். 

மனித உடல்
மனித உடல்

உடலின் சமநிலை (பேலன்ஸ்) ஏன் முக்கியம்?

உடல் சமநிலை என்பது வெறும் கால்களின் வலிமையை மட்டும் பொறுத்தது அல்ல. அது பல உறுப்புகளின் டீம் வொர்க் (Team Work). அதில் நான்கு முக்கியமான விஷயங்கள் அடங்கியுள்ளன.

தசைகள்: உடலைத் தாங்கும் தூண்கள்.

உள் காது: இதுதான் உடலின் ‘சென்சார்’. நாம் நேராக இருக்கிறோமா இல்லையா என்று மூளைக்குச் சொல்லிக்கொண்டே இருக்கும்.

கண்கள்: தரை மட்டத்தைச் சரியாகக் கணிக்கும்.

மூளை: இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து வேலை செய்யும் மேலாளர் போன்றது.

உங்களால் ஒற்றைக் காலில் சரியாக நிற்க முடியவில்லை என்றால், இந்த டீம் வொர்க்கில் ஏதோ  கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்.

அதாவது, நீங்கள் தடுமாறி விழுவதற்கான  வாய்ப்பு அதிகரிக்கும். நடை மற்றும் உடல் அசைவுகள் குறையலாம். மூளைத்திறன் குறைபாடு ஏற்பட்டு, ஞாபக மறதி அல்லது சிந்திக்கும் திறன் குறையலாம். இதயம் மற்றும் நரம்பு மண்டலம் சார்ந்த நோய்கள் பாதிக்கலாம்.

Flamingo balance test
Flamingo balance test

‘ஃபிளமிங்கோ பேலன்ஸ் டெஸ்ட்’: எப்படிச் செய்ய வேண்டும்?

காலணிகள் அணியாமல் வெறும் கால்களுடன் கண்களை மூடி சமதளமான தரையில் நிற்கவும்.

ஒரு காலை மடக்கியபடி, மற்றொரு காலில் (ஃபிளமிங்கோ பறவை நிற்பது போல) நிற்க வேண்டும். கைகளை மேலே தூக்கியபடியோ, இடுப்பிலோ வைத்துக்கொள்ளலாம்.

நீங்கள் எவ்வளவு நேரம் ஒற்றைக் காலில் அசையாமல் நிற்கிறீர்கள் என்று கணக்கிடுங்கள்.

பேலன்ஸ் இருக்கிறதா?

(இது பொதுவான வரையறைதான். இதை வைத்து பயப்படவோ, கவலைகொள்ளவோ தேவையில்லை. ஆரோக்கியத்துக்கான அலெர்ட்டாக எடுத்துக்கொண்டால் போதும்.

தலைச்சுற்றல், மயக்கம் போன்ற பிரச்னைகள் இருந்தால் மருத்துவ ஆலோசனையின்றி இவற்றை முயற்சி செய்ய வேண்டாம்)

30 நொடிகள் அல்லது அதற்கு மேல் நிற்க முடிந்தால் உங்களுடைய பேலன்ஸ் வேறு லெவல்…. சூப்பர்!

20 முதல் 29 நிமிடங்கள் நிற்க முடிந்தால்,  சிறப்பு.

10 முதல் 19 நொடிகள் நிற்க முடிந்தால், உங்கள் பேலன்ஸ் சராசரிக்கும் கீழே  இருப்பதாக அர்த்தம். அதை நீங்கள் மேம்படுத்த வேண்டும்.

10 நொடிகளுக்கும் கீழ்தான் நிற்க முடிகிறது, நீங்கள் 40 ப்ளஸ் வயதில் இருக்கிறீர்கள் என்றால் அலெர்ட் ஆக வேண்டும்.

ஸ்குவாட்
ஸ்குவாட்

பேலன்ஸை எப்படி இம்ப்ரூவ் செய்வது?

நாற்காலியில் அமர்ந்து எழுவது போன்ற ‘ஸ்குவாட்’ (Squats) பயிற்சி, கால்களுக்கு அதிக வலிமை தரும்.  

குப்புறப்படுத்தபடி தரையில் கைகளை ஊன்றி, உடல் முழுவதையும் நேர்க்கோட்டில்  அசையாமல் நிறுத்தி வயிற்றுத் தசைகளை வலுப்படுத்தும்  பிளாங்க்  (Plank) பயிற்சிகள் செய்ய வேண்டும். 

கூன் போடாமல் நிற்க, நடக்க, உட்காரப் பழக வேண்டும்” என விளக்குகிறார் ஷீபா தேவராஜ்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *