’உங்கள் நம்பிக்கையே என் மருந்து’ – உடல்நிலை குறித்த அப்டேட் தந்த வானதி சீனிவாசன்

Spread the love

கோவை வடக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு, தேர்தல் பரப்புரையின் இடையே திடீரென கால் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு தரப்பட்ட மருந்துகள் காரணமாக ஏற்பட்ட லேசான அலர்ஜி காரணமாக கண்காணிப்பிற்காக ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல் நிலை தேறியதைத் தொடர்ந்து, பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இதனிடையே தனது உடல் நிலை குறித்து வானதி சீனிவாசன், மருத்துவமனையில் இருந்து எடுத்த ஒரு வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “உங்களது அன்பினாலும், பிரார்த்தனையாலும் விரைவாக உடல்நலம் தேறிக்கொண்டு இருக்கிறேன். ஒரிரு நாட்களில் உங்களை சந்திக்க இருக்கிறேன். நமது தேர்தல் பிரச்சாரம் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும்.

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் எனக்காக தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு இருக்கும் ஒவ்வொரு சகோதர, சகோதரிக்கும் கூட்டணி கட்சியினருக்கும் மனப்பூர்வமான நன்றிகள். தமிழகத்தின் மீது அன்பும், ஆற்றலின் மீது அசைக்க‌ முடியாத நம்பிக்கையும் வைத்துள்ள பிரதமர் மோடிக்கு, வெற்றியின் மூலம் நமது அன்பினை தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உங்கள் பிரார்த்தனையே என் வலிமை. உங்கள் நம்பிக்கையே என் மருந்து. விரைவில் குணமடைந்து உங்களிடையே வருவேன். மீண்டும் சந்திப்போம், வெற்றியை கொண்டாடுவோம். இந்த தேர்தலில் நம் வெற்றி நிச்சயம், வெற்றி நமதே” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *