புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான 3 வழக்குகளின் தற்போதைய விசாரணை நிலவரம் குறித்த அறிக்கையை சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்துள்ளார்.
அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது 3 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்குகளின் அடிப்படையில் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு எதிரான 3 பண மோசடி வழக்குகளில் அவருடன் சேர்த்து மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு முறை இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதும் 100 முதல் 150 பேருக்கு சம்மன் அனுப்பி அவர்களிடம் சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையை வேண்டுமென்றே தாமதம் செய்யும் நோக்கில் தமிழக அரசும், போலீஸாரும் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டி ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
அந்த வழக்கை கடந்த முறை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றமும் கண்காணித்து வருகிறது. செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையின் நிலவரம் குறித்த அறிக்கையை சென்னை சிறப்பு நீதிமன்றம் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று
உத்தரவிட்டது.
அதன்படி, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (பிப்.28) விசாரணைக்கு வரவுள்ள நிலையில், செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளின் விசாரணை தொடர்பான தற்போதைய நிலவர அறிக்கையை, எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் சீலிட்ட உறையில் நேற்று தாக்கல் செய்தார்.
செந்தில் பாலாஜி, ஜாமீன் கிடைத்த ஒருநாள் இடைவெளியில் மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ளதால், அரசு தரப்பு சாட்சிகள் தைரியமாக சாட்சியம் அளிக்க முன்வர மாட்டார்கள் என்பதால், ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத் துறையும், வித்யாகுமார் என்பவரும் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.