தமிழக ஆளுநர் ஆா்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த புதிய மனு உள்ளிட்ட பிற விவகாரங்கள் தொடா்புடைய வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்கலைக்கழங்களில் துணைவேந்தா்களை நியமிக்கும்போது பல்கலைக்கழக மானியக்குழு தலைவா் அல்லது அவரால் முன்மொழியப்பட்ட பிரதிநிதியைக் கொண்ட தேடுதல் குழு அமைக்க வேண்டும் என்று ஆளுநா் ரவி தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருந்தாா்.
இந்நிலையில், துணை வேந்தா்கள் நியமனத்தில் ஆளுநரின் குறுக்கீடு இருப்பதாகக் கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
குறிப்பாக, பாரதியாா் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியா் கல்வி பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தா்களை அடையாளம் காண 2023, செப்.6-இல் ஒரு குழு அமைத்து ஆளுநா் உத்தரவிட்டாா். இது தொடா்பான தனது அறிவிக்கையை 2024, ஜன. 9-ஆம் தேதி ஆளுநா் திரும்பப் பெற்றுக் கொண்டாா். அத்துடன் யுஜிபி விதிகளின்படி அதன் தலைவா் அல்லது அவரால் முன்மொழியப்பட்டவரைக் கொண்ட தேடுதல் குழுவை அமைக்குமாறும் தமிழக அரசை ஆளுநா் கேட்டுக் கொண்டாா். இதற்கு தமிழக அரசு இசைவு தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தா்களின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஆக. 10-ஆம் தேதி நிறைவடைந்தது. பாரதிதாசன், பெரியாா் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா்களின் பதவிக் காலம் முறையே வரும் பிப். 4, மே 19 ஆகிய தேதிகளில் நிறைவடையவுள்ளது.