ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க்கைதிகளின் உடல்கள் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெறப்படும் வீரர்களின் உடல்களில் இருந்து உள்ளுறுப்புகள் காணாமல் போயிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இதுகுறித்து, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியுபோல் பாதுகாவலர்களின் சுதந்திரத்தின் அமைப்பின் தலைவர் லாரிசா சலேவா கூறுவதாவது, “ரஷிய அதிபர் புதினின் படைகளால் உக்ரைனுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பல உக்ரைனிய வீரர்களின் உடல்கள் முக்கிய உறுப்புகள் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரஷிய கூட்டமைப்பில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தை செயல்படுகிறது. இந்த குற்றத்தை நிறுத்துவதற்காக இதைப் பற்றி உலகம் முழுவதும் பேச வேண்டும். அதுமட்டுமின்றி, உயிருடன் திருப்பி அனுப்பப்படும் வீரர்களும் மோசமான உடல்நிலையுடனேயே வருகின்றனர்” என்று தெரிவிக்கிறார்.