சமூக அரசியலால் சலசலக்கும் திமுக!
இதுஒருபுறம் இருக்க திமுக-வில் சமூக கணக்குகளை முன்னிறுத்தி நடைபெறும் அரசியல் அக்கட்சி வட்டாரத்துக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து திமுக மூத்த நிர்வாகிகள் சிலர் பேசுகையில், “தெலுங்கு பேசும் நாயுடு சமூகத்துக்கு இந்தமுறை உடுமலைப்பேட்டை தொகுதியை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து குடிமங்கலம் மேற்கு ஒன்றியச் செயலாளர் அடிவள்ளி முரளி களத்தில் இறங்கியுள்ளார்.
அதிமுக-வில் இருந்து திமுக-வுக்கு வந்த முரளி இந்த அஜண்டாவை முன்வைத்து சைலன்ட்டாக பணியாற்றுவது, திமுக-வில் இருக்கும் கொங்கு வேளாள கவுண்டர் உள்ளிட்ட பிற சமூகங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடுவின் பெயரை முதல்வர் ஸ்டாலின் சூட்டினார். இதையடுத்து, கம்மவார் நாயுடு சங்கத்தின் தலைவர் ரவீந்திரன் உள்ளிட்டோரை முரளி அழைத்துச் சென்று முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இது திமுக-வில் இருக்கும் நாயுடு சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அந்த சமூகத்தைச் சேர்ந்த உடுமலைப்பேட்டை மத்திய மாவட்ட ஒன்றியச் செயலாளரான செந்தில், மாவட்ட மகளிர் அணி செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வான தம்பு என்கிற செல்வராஜின் மகளுமான அனிதா, கம்மவார் நாயுடு சங்கத்தின் தலைவர் ரவீந்திரனை நேரில் சந்தித்து தாங்கள் இல்லாமல் முதல்வரைச் சந்தித்தது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
இதனால், இந்த அரசியலுக்குள் சிக்கிக் கொள்ள வேண்டாம் என கம்மவர் நாயுடு சங்கம் முடிவெடுத்துள்ளது. உடுமலைப்பேட்டையைவிட மடத்துக்குளத்தில்தான் நாயுடு சமூகத்தினர் அதிகமாக உள்ளனர். எனவே, அந்த நாயுடு சமூகத்தைச் சேர்ந்த தங்களுக்கு மடத்துக்குளம் தொகுதியை ஒதுக்க வேண்டுமென மத்திய மாவட்ட ஒன்றியச் செயலாளரான செந்தில், மாவட்ட மகளிர் அணி செயலாளரான அனிதா ஆகிய இருவரும் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான மு.ஜெயக்குமார் உடுமலைப்பேட்டை தொகுதியையும், மாவட்ட அவைத் தலைவரான ஜெயராமகிருஷ்ணன் மடத்துக்குளம் தொகுதியையும் பெற்றுவிட வேண்டுமென தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.
துணை முதல்வர் உதயநிதியின் குட்புக்கில் உள்ள ஜெயக்குமாருக்கு இந்த முறை உடுமலைப்பேட்டை தொகுதி ஒதுக்கப்படும் என்ற பேச்சு பலமாக அடிபடுவதால் அவர் தற்போதே தேர்தல் களத்தில் இறங்கிவிட்டார். அமைச்சர் சக்ரபாணியின் ஆதரவாளரான ஜெயராமகிருஷ்ணன் மீது கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சரியாக செயல்படாதது, தேர்தல் பணியில் சுணக்கம் காட்டியது போன்ற குற்றச்சாட்டுகள் இருப்பதால், கட்சித் தலைமையும் அவருக்கு மடத்துக்குளம் ஒதுக்கலாமா? வேண்டாமா? என பரிசீலித்து வருகிறது.
அதேவேளை, மடத்துக்குளத்தில் பலமாக உள்ள அதிமுக-வை எதிர்த்து பெண் வேட்பாளரான அனிதாவை களமிறக்கினால், நாயுடு சமூகத்தினருக்கு பிரதிநித்துவம் அளித்தாற்போல் ஆகிவிடுவதுடன், அந்த சமூகத்தினருக்கு உள்ள அதிருப்தியை சரிகட்டிவிட முடியும் என திமுக தலைமை நினைக்கிறது.” என்கின்றனர் திமுக மூத்த நிர்வாகிகள்.
தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், சீட்டை பெறுவதில் கட்சிபேதமின்றி உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் தொகுதியில் களேபரங்கள் நடைபெற்று வருகின்றன.