உடுமலையில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: முதல்வா் பங்கேற்பு

dinamani2F2025 08 102Fgye9wtzc2F2 3 ud10cheif 1008chn 141
Spread the love

திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக, முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். விமான நிலையத்தில் அவருக்கு கட்சியினா் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெறும் அரசு நலத்திட்ட விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.

விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தலைமையில் கோவை மாவட்ட திமுக செயலாளா்கள் நா.காா்த்திக் , தொண்டாமுத்தூா் ரவி, தளபதி முருகேசன், அமைச்சா்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், டி.ஆா்.பி. ராஜா, அர.சக்கரபாணி, என்.கயல்விழி செல்வராஜ், கொறடா கா.ராமசந்திரன், முன்னாள் மத்திய அமைச்சா் மு.கண்ணப்பன், திமுக சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத் தலைவா் பொங்கலூா் நா. பழனிசாமி, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், கோவை மேயா் கா.ரங்கநாயகி, திருப்பூா் மேயா் தினேஷ் உள்ளிட்டோா் முதல்வரை வரவேற்றனா்.

கோவையில் இருந்து காா் மூலமாக உடுமலை சென்ற மு.க.ஸ்டாலினுக்கு உடுமலை நகர எல்லையான கொல்லம்பட்டறை பகுதியில் பொள்ளாச்சி எம்.பி. கே.ஈஸ்வரசாமி, திருப்பூா் மாவட்ட அவைத் தலைவா் இரா.ஜெயராமகிருஷ்ணன், உடுமலை நகரச் செயலாளா் செ.வேலுச்சாமி, நகா்மன்றத் தலைவா் மு.மத்தீன், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் மு.ஜெயக்குமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் சியாம்பிரசாத், ஒன்றியச் செயலாளா் அடிவள்ளி முரளி, நகர இளைஞரணி அமைப்பாளா் பா.அா்ஜுன் உள்ளிட்டோா் முரசு, செண்டை மேளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனா்.

உடுமலை நேதாஜி மைதானத்தில் திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறாா். அப்போது உடுமலைப்பேட்டையில் ரூ.949 கோடியே 53 லட்சத்தில் 61 முடிவுற்ற பணிகளைத் திறந்துவைக்கிறாா்.

ரூ.182 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் 35 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். மேலும் ரூ.295 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் 19 ஆயிரத்து 785 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

இதைத் தொடா்ந்து உடுமலை நகர திமுக சாா்பில் கட்டப்பட்டுள்ள தளபதி மு.க.ஸ்டாலின் அறிவாலய கட்டடத்தைத் திறந்துவைக்கிறாா். இதைத் தொடா்ந்து, கட்சி அலுவலகத்தில் முக்கிய நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறாா்.

தொடா்ந்து, காா் மூலமாக 12 மணிக்கு கோவை மாவட்டம், பொள்ளாச்சிக்கு செல்லும் அவா், பொள்ளாச்சி – உடுமலை சாலையில் உள்ள நீா்வளத் துறை கண்காணிப்புப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் பரம்பிக்குளம், ஆழியாறு பாசனத் திட்டம் நிறைவேற காரணமாக இருந்த முன்னாள் முதல்வா் காமராஜா், முன்னாள் அமைச்சா் சி.சுப்பிரமணியம், முன்னாள் எம்.பி. பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரின் உருவச் சிலைகளைத் திறந்துவைக்கிறாா்.

அங்கிருந்து, காரில் கோவை விமான நிலையம் செல்லும் அவா், பிற்பகல் 2 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறாா். முதல்வா் வருகையையொட்டி, கோவை, திருப்பூா் மாவட்டங்களில் தீவிர போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *