உடுமலை: உடுமலை அருகே வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவசாயி உயிரிழந்தார். இந்நிலையில், அவர் அடித்துக் கொல்லப்பட்டாரா என்ற வகையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
உடுமலை அருகே மேல்குருமலை மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மாரிமுத்து (58). அவர் உள்பட அந்த மலைகிராமத்தைச் சேர்ந்த 4 பேர் மீது ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில் மாரிமுத்து கடந்த ஜூலை 29-ம் தேதி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து, மூணாறு அருகே தங்கியிருக்கும் மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்கச் சென்றுள்ளார் மாரிமுத்து.
இந்நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை பெற்றுக்கொள்ள வழக்கறிஞர் அழைக்கவே, நேற்று கேரள மாநில அரசுப் பேருந்தில் ஏறி உடுமலை சென்று கையெழுத்திட்டு மீண்டும் உடுமலையில் இருந்து மூணாறுக்கு பேருந்து ஏறியுள்ளார்.
சின்னாறு வனத்துறை சோதனைச்சாவடி அருகே பேருந்து வந்தபோது. உடுமலைப்பேட்டை வனத்துறை ஊழியர்கள் பேருந்தில் இருந்து அவரை இறக்கியதாக கூறப்படுகிறது. அப்போது புலிப் பல் வைத்திருந்ததாக மாரிமுத்துவை பிடித்துள்ளனர். உடுமலைக்கு அழைத்து வந்து வனச்சரக அலுவலகத்தில் வைத்து விசாரித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக குடும்பத்தினர் யாருக்கும் தகவல் அளிக்கவில்லை. இந்நிலையில் மாரிமுத்து வனத்துறை அலுவலகத்தில் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது நீண்டநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, மர்மமான முறையில் உயிரிழந்ததாக வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது.
அவர், வனத்துறை அலுவலகத்தில் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து உடுமலை டிஎஸ்பி நமச்சிவாயம் தலைமையிலான போலீஸார் சம்பவ இடதுக்கு வந்து மாரிமுத்துவின் சடலத்தை கைப்பற்றினர். தொடர்ந்து கோட்டாட்சியர் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாரிமுத்துவின் மகள் சிந்து உடுமலை காவல் ஆய்வாளரிடம் இன்று (ஜூலை 31) அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் பழங்குடியினர். சட்டத்துக்கு புறம்பாக தந்தையை அழைத்து சென்றனர். இன்றைக்கு விசாரணையில் அவர் உயிரிழந்துள்ளார். அவர் மிகவும் மனதைரியமுள்ளவர். தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை. இதில் எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதையடுத்து உடுமலை வனச்சரக அலுவலகத்தில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் மலைகிராம அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டன்.
மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கூறும்போது, “வனத்துறை அதிகாரிகள் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய வேண்டும். வனத்துறை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில், அவரை அடித்துக் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.” என்றனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே கூறும்போது, “இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. பிரேதப் பரிசோதனை நடந்து வருகிறது. தற்கொலை செய்துகொண்டதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். இறந்தவரின் உடலில் காயம் ஏதும் இல்லை. ஆனால் கைது தொடர்பாக குடும்பத்தாருக்கு சொல்லாதது உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக போலீஸார் முழுமையாக விசாரித்து வருகின்றனர். ” என்றார்.