உட்கட்சி பூசலால் வீழ்த்தப்பட்ட கா.ராமசந்திரன் அரசு கொறடாவாக மாற்றப்பட்டதன் பின்னணி | Former minister K. Ramachandran lost his minister post due to internal party conflict in Nilgiri district

1318798.jpg
Spread the love

உதகை: நீலகிரி மாவட்ட உட்கட்சி பூசலால் அமைச்சர் பதவியை இழந்த கா.ராமசந்திரன், மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பதால் கொறடாவாக மாற்றப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் மற்றும் முன்னாள் அமைச்சர் கா.ராமசந்திரன் ஆகிய இருவரால் இரண்டாக பிரிந்து நிற்கிறது. நீண்ட நெடிய காலமாக இந்த இருவரும் எதிரும், புதிருமாக பயணப்பட்டு வருகின்றனர்.பா.மு.முபாரக் சிறுபான்மையினத்தை சேர்ந்தவர் என்றால், கா.ராமசந்திரன் படுகரினத்தை சேர்ந்தவர்.

நீலகிரி மாவட்டத்தில் படுகரினத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவும், மாவட்டத்தில் திமுக வெற்றி பெற்ற ஒரே இடம் என்பதால் கா.ராமசந்திரனுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்தது. முந்தைய திமுக ஆட்சியில் கதர்வாரியத்துறை அமைச்சராக இருந்தவருக்கு ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் வனத்துறை அமைச்சராக பதவி உயர்வு கிடைத்தது.

ராமசந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை அவரது எதிர் தரப்பினர் ரசிக்கவில்லை. இந்நிலையில், இவருக்கு எதிராக தொடர்ந்து மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக் காய் நகர்த்தி வந்தார். மருமகனின் தலையீடு அதிகமாக இருக்கிறது என தலைமைக்கு புகார்கள் கிளம்ப, சுற்றுலாத்துறை அமைச்சராக கா.ராமசந்திரன் மாற்றப்பட்டார்.

ராமசந்திரனின் அமைச்சர் பதவியை பறிக்க பகீரதப் பிரயத்தனம் செய்து வந்தார் பா.மு.முபாரக். வயது மூப்பு காரணமாக இதுவே அரசியலில் தனது கடைசி அத்தியாயம் என்ற மன ஓட்டத்தில் கா.ராமசந்திரன் இருந்து வந்தார். அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என கடந்த சில மாதங்களாக பேச்சு அடிப்பட்டு வந்த நிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் பதவி இழக்கிறார் என பா.மு.முபாரக் ஆதரவாளர்கள் தொடர் பிரச்சாரம் செய்து வந்தனர்.

அமைச்சரவை மாற்றம் குறித்த செய்திகள் மேலோங்கிய நிலையில், அமைச்சர் கா.ராமசந்திரன் மாவட்ட முழுவதிலும் பயணம் மேற்கொண்டு, கடந்த சில நாட்களாக தீவிரமாக பணியாற்றி வந்தார். அரசு துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தி, அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் நிலை குறித்து ஆய்வு செய்து வந்தார்.

தற்போது அமைச்சரவையிலிருந்து கா.ராமசந்திரன் விடுவிக்கப்பட்டுள்ளார். இது தங்களின் முறையீட்டுக்குக் கிடைத்த வெற்றி என பா.மு.முபாரக் ஆதரவாளர்கள் மார்தட்டி வந்தாலும், மாவட்டத்தில் திமுக வென்ற ஒரே இடம் மற்றும் படுகரின மக்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பதால் கா.ராமசந்திரனுக்கு அரசு கொறடா பதவி வழங்கப்பட்டுள்ளது. கட்சிரீதியாக ராமசந்திரனுக்கு அங்கீகாரத்தை கட்சி தலைமை வழங்கியுள்ளது என அவரது ஆதரவாளர்கள் சுட்டிகாட்டி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *