உணர்வுகளை தூண்டும் வகையில் அரசியல் செய்கின்றனர்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு | doing politics with emotions Union Finance Minister Nirmala Sitharaman alleges

1355330.jpg
Spread the love

சென்னை: தங்களது இயலாமை, ஊழல் விவகாரங்களை மறைக்கவே, உணர்வுகளை தூண்டும் வகையில் அரசியல் செய்கின்றனர் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்த நிர்மலா சீதாராமன், தொகுதி மறுவரையறைக் கூட்டம் , பிஎம்ஸ்ரீ நிதி தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் நடைபெற்றது மக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையிலான அரசியல். 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது பிஎம்ஸ்ரீ விவகாரத்தை திமுக கிளப்பியது. அடுத்ததாக, புதிய கல்விக் கொள்கை. அதில், இந்தி கட்டாயம் படித்துத்தான் ஆக வேண்டும் என்று எங்கேனும் கூறப்பட்டுள்ளதா? நீட் எதிர்ப்பின்போது புதிய கல்விக் கொள்கை பற்றி பேசாதவர்கள் 2022 ஜூன் மாதத்துக்குப் பின்னர் பேசத் தொடங்கி விட்டனர்.

இண்டியா கூட்டணி பலமிழந்து கொண்டே போகிறது. அதற்கு தலைமை ஏற்கும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியில் ஆட்கள் இல்லை. கூட்டணி சிதறிப்போய் விட்டால் காங்கிரஸும், திமுகவும்தான் மிஞ்சுவார்கள். இண்டியா கூட்டணி தலைமை இல்லாமல் சிதறிப்போகும் நேரத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வருகிறது. நாங்கள் நல்லாட்சி புரிந்தோம், முதலீடுகளால் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது என்று பேசுவதற்கு அவர்களிடம் எந்த தகவலும் இல்லை.

செமிகண்டக்டர் மூலம் மத்திய அரசு முதலீடுகளை இங்கு கொண்டு வந்துள்ளது. ஆனால், தமிழகத்துக்கு திமுகவால் கொண்டுவரப்பட்ட நலன் என்று எதுவுமில்லை. மற்றொரு பக்கம் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு என்னவானது தெரியுமா? அப்பெண்ணை இந்த நிலைமைக்கு உள்ளாக்கியவர் உங்கள் கட்சிக்காரர்தானே?

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உங்கள் தோழமைக் கட்சி என்பதால்தான் விசிகவினர் அமைதியாக இருக்கின்றனர். போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கியவர், உங்கள் குடும்பத்தினரை வைத்து சினிமா எடுத்த விவகாரம் வெளியானது. இவையெல்லாம் 2026 தேர்தலில் வெளிவரும் என்பது தெரிந்துவிட்டது. அதனால்தான், தமிழை நிராகரிக்கிறார்கள், இந்தியை திணிக்கிறாா்கள் என்று கூறுகின்றனர். தமிழை வளர்க்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ள முடியாததால், இந்தியை திணிக்கிறார்கள் என்கின்றனர். தங்களது இயலாமை, ஊழல் விவகாரங்கள், போதைப்பொருள் கும்பலுடனான தொடர்பு ஆகியவை எல்லாம் வெளியில் வந்துவிட்டது. மேலும், டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழலும் வெளிவந்துவிட்டது.

கடந்த மன்மோகன்சிங் அரசில் இவர்கள் தோழமைக் கட்சியாக இருந்தபோது, எப்படி தினமும் ஒரு ஊழல் வெளிவந்ததோ, அதேபோல தற்போதும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. எனவேதான் தொகுதி மறுவரையறை விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்.

‘எந்த ஒரு மாநிலத்துக்கும் அநியாயம் நடக்காது’ என்று பிரதமரே கடந்த ஆண்டு கூறிவிட்டார். தற்போது இவர்கள் நியாயமான தொகுதி மறுவரையறை என்று ஊரெல்லாம் போஸ்டர் அடித்துள்ளனர். ஆனால், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம், டாஸ்மாக்கில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என்ற போஸ்டர்கள் எங்கும் இல்லை.

வரும் 2026 தேர்தலின்போது ஒரு நல்ல விஷயத்தைக்கூட சொல்ல முடியாத நிலையில், மீண்டும் தமிழகத்தை 1960 காலகட்டத்துக்கு கொண்டுசெல்லும் முயற்சியில் உள்ளனர். தொகுதி வரையறை உடனே நடக்காது. முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, பின்னர், தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்படும். அந்த ஆணையம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று கருத்துகளைத்தான் கேட்டுத்தான் முடிவெடுக்கும். அதனால், தற்போதே இந்த விவகாரத்தை முன்னெடுப்பது அவசியமற்றது. தற்போது நடந்த கூட்டத்துக்கு வந்த மற்ற மாநிலங்களின் தலைவர்கள், அவரவர் மாநில நலனைப் பார்த்துக் கொள்வார்கள்.

தொகுதி மறுவரையறை தொடர்பான கேள்விகளுக்கு பதில் சொல்லும் அதிகாரம், அதற்கான ஆணையத்திடம் மட்டுமே உள்ளது. அவர்களிடம்தான் அதைக் கேட்க வேண்டும். மேலும், தொகுதி மறுவரையறைக்கு மக்கள் தொகை மட்டுமே அடிப்படை கிடையாது. மக்கள் தொகை தவிர்த்த வேறு விஷயங்களும் உள்ளன.

திராவிட இயக்கத்தினர் எப்போதும் உண்மைக்குப் புறம்பான விஷயத்தை முன்னெடுப்பார்கள். அதை ஊர்ஜிதப்படுத்த தொடர் பிரச்சாரம் மேற்கொள்வார்கள். அது தொடர்பான உண்மையை வெளியில் சொல்லும்போது, வேறு விஷயத்துக்கு சொன்றுவிடுவார்கள். காங்கிரஸ் ஆட்சி போன பின்னர், தமிழகத்தில் மாறி மாறி திராவிடக் கட்சிகள்தான் ஆட்சிபுரிந்துள்ளன. ஏன் இதுவரை சமத்துவத்தை நிலைநாட்ட முடியவில்லை. பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்துக்கான நிதி, ஒப்பந்த அடிப்படையிலேயே விடுவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *