உண்மையில் உங்களுக்கு மக்கள் மீது அக்கறை இருக்கிறதா?: முதல்வர் ஸ்டாலின் மீது விஜய் அட்டாக் – Kumudam

Spread the love

தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் நடைபெற்றது. இதில் பச்சை துண்டு போட்டப்படி விஜய் நிர்வாகிகள் மத்தியில் பேசியதாவது: வேலூர் கூட்டத்தில் தமிழ்நாடுதான் விஜய், விஜய்தான் தமிழ்நாடு என்று நான் ஏன் கூறினேன் என்றால், உண்மையான பிரதிநிதி நாம் என்பதற்குதான் அப்படி கூறியிருந்தேன். விஜய் vs ஸ்டாலின் எனக் கூறியிருந்தேன், தமிழ்நாடு பேரவைத் தேர்தலுக்கு டெல்லியை பற்றி ஏன் பேச வேண்டும் என்று கேட்டிருந்தேன், உடனே பாஜகவுக்காக விஜய் பேசுகிறார் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

சென்னையில் டெல்லி டெல்லி எனக் கூறுகிறார்கள், ரைடு வந்தால் டெல்லிக்கு வெள்ளை கொடி பிடிக்கிறார்கள். தமிழ்நாட்டை காப்பாற்றுவது பிழைக்க வைப்பது எல்லாம் திமுக, ஸ்டாலின்தான் என்பதெல்லாம் வேலை செய்யாது. சின்ன குழந்தைகள் எல்லாம் கூற ஆரம்பித்துவிட்டார்கள், ’ஓம் சக்தி திமுக ஒரு தீய சக்தி’ என்று. கிரிக்கெட்டில்கூட தமிழ்நாட்டு அணியை டில்லி தொட்டுக்கூட பார்க்க முடியாது. கிரிக்கெட்டில் விசில் போடுவது சிஎஸ்கே, தேர்தலில் விசில் போடப் போவது தவெக. அனைத்து அணிகளையும் திமுக அடித்து நொறுக்கும்.

பயமுறுத்தும் வேலை இனி எடுபடாது, அதனால் தான் நான் பேசுவதை மாற்றி பேசி அவதூறு பரப்புகின்றனர்.எனக்கும் என்னுடைய மக்களுக்கு நடுவில் யாராலும் நுழைய முடியாது. அம்மா பையன், அப்பா பையன், அண்ணன் தங்கை, அக்கா தம்பி உறவு. இது ஆழமான உறவு என்பதை தமிழக மக்கள் உணர்ந்திருப்பார்கள். மற்றவர்கள் இது தேர்தல், ஆனால் எனக்கும் என்னை நேசிக்கும் மக்களுக்கு இது எமோஷன்.

அடுத்த ஜென்மத்தில் ஒரு விவசாயி குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு விவசாயத்தை பற்றி விவரமாக தெரியாது. மற்றவர்கள் மாதிரி டெல்டா காரன் என்று உங்கள் காதில் டால்டா ஊற்ற வரவில்லை. ஆனால் விவசாயிகள் பிரச்சினை பற்றி எனக்கு நன்றாக தெரியும். டெல்டா காரன் என்று சொன்ன முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி கவனித்தாரா? விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தது திமுக அரசு. 

“விவசாயிகள் பற்றி தெரியவில்லை என்றாலும் அவர்களின் கஷ்டம் எனக்குத் தெரியும். நம்முடைய ஆட்சியில் விவசாயிகளின் பிரச்னைகள் தீர்த்துவைக்கப்படும். சமீபத்தில் தண்ணீர் இல்லாமல் தமிழ்நாடு திவால் ஆகப்போகிறது என்று ஒரு கட்டுரை படித்தேன். உண்மையில் மிகவும் வருத்தமாக இருக்கிறது. காரணம், நிலத்தடி நீரை பாதுகாக்காமல் இருப்பதுதான்.

மணலைக் கொள்ளையடித்தால் என்ன நடக்கும்? மலைகளை முழுங்கினால் என்ன நடக்கும்? கனிம வளங்கள் கொள்ளையடித்தால் பிறகு என்ன நடக்கும்?மணல் கொள்ளைக்குக் காரணம் மணல் மாஃபியா குழுக்கள். அந்த மணல் மாஃபியா குழுக்களுக்கு ஆதரவு கொடுப்பது உங்களுடைய திமுக அரசுதானே! உங்களுடைய ஆட்சியில் தமிழ்நாடே திவால் ஆகப்போகிறது,

மழைநீரில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் வீணாகிறது. இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? மாறாக, விவசாயிகளை குண்டர் சட்டத்தில் போடத்தான் தெரியும். விவசாயிகளுக்கு ஆதரவாக ஏதாவது ஒரு போராட்டத்தில் உடன் இருந்திருக்கிறீர்களா?. உங்கள் அரசு பொறுப்பேற்றதும் விவசாயிகளுக்காக பெரிய பெரிய திட்டங்களை செயல்படுத்தலாமே.. உண்மையில் உங்களுக்கு மக்கள் மீது அக்கறை இருக்கிறதா? நம் ஆட்சி பொறுப்பேற்றதும் பெரிய பெரிய திட்டங்களை செயல்படுத்துவோம்.

மீனவர்கள் கைது செய்யப்பட்டதும் மீனவர்களுக்காக கடிதம் எழுதுவது மட்டும் போதுமா? மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் இருக்க வேண்டும். மீனவர்கள் மீது யாரும் கை வைக்கக்கூடாது. மீனவர்களுக்காக தவெக ஆட்சி அமையும். ஒருவர் அமைதியாக இருந்தால் எதுவும் தெரியாது என்று நினைக்கின்றனர். 2 ஆவது முறையாக திமுக ஆட்சிக்கு வந்ததாக சரித்திரமே கிடையாது” என்றார். 

இதை தொடர்ந்து பேசிய விஜய், விவசாய கடன் தள்ளுபடி, உரத்தட்டுப்பாடு நீக்கம், பொறியியல், மருத்துவ படிப்புக்கு கல்வி செலவை அரசே ஏற்கும். ரேஷன் பொருட்கள் பாக்கெட் போட்டு விநியோகம் செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *