ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ரூ.130.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 6) திறந்து வைத்து பார்வையிட்டார்.
கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழக முதல்வர் தலைமையில் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக ரூ.146.23 கோடி செலவில் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகமும், பொதுப் பணித்துறையினரும் இணைந்து மழை உட்பட பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே கட்டுமானப் பணிகளை முடித்துள்ளனர்.
700 படுக்கைகள்… நீலகிரி மாவட்டத்தில் மருத்துவத்துறை கட்டமைப்பு நிறைவு பெற்ற மாவட்டமாக உள்ள நிலையில், இந்தியாவிலேயே மலை பிரதேசங்களில் 700 படுக்கைகள் கொண்ட முதல் அரசு மருத்துவமனையாக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இன்று திறக்கப்பட்டது.
இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ.,சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே போன்ற அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. மேலும், 12 அறுவை சிகிச்சை அரங்கங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.
பழங்குடியினருக்கு பிரத்யேக வார்டு: இம்மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பழங்குடியினருக்காக பிரத்யேகமாக 50 படுக்கைகள் கொண்ட வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 20 படுக்கைகள் ஆண்களுக்கும், 20 படுக்கைகள் பெண்களுக்கும், குழந்தைகள், மகப்பேறு என்று 10 படுக்கைகள் என பழங்குடியின மக்களுக்கு வார்டு அமைக்கப்பட்டுள்ளது என்பது ஊட்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தனி சிறப்பாக அமைந்துள்ளது.
அதேபோல், மருத்துவமனையில் தண்ணீர் வசதிக்காக ரூ.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
விழாவில், தோடர், குரும்பர், இருளர், கோத்தர் பழங்குடியினர்களின் பாரம்பரிய நடனங்களை முதல்வர் பார்வையிட்டார். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன், அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன், நீலகிரி எம்பி ஆ.ராசா, இந்து குழும இயக்குநர் என்.ராம், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, ஊட்டி எம்எல்ஏ கணேஷ், மாவட்ட செயலாளர் கே.எம். ராஜு, மருத்துவமனை டீன் கீதாஞ்சலி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.