“உதயநிதி ஸ்டாலினை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்" – கொதிக்கும் பியூஷ் கோயல்

Spread the love

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று காலை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்குச் சென்றார்.

அங்கு பா.ஜ.க தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி காலை விருந்தளித்தார். அதைத் தொடர்ந்து பியூஷ் கோயல் எடப்பாடி பழனிசாமி இல்லத்திலிருந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.

எடப்பாடி இல்லத்தில் பாஜக தலைவர்கள்
எடப்பாடி இல்லத்தில் பாஜக தலைவர்கள்

அப்போது, “தமிழ்நாட்டில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியின் தலைவர எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, அவருடன் காலை உணவு உண்டதைப் பெருமையாகக் கருதுகிறேன். பிரதமர் மோடியின் தலைமையிலும், தமிழ்நாட்டில் பழனிசாமியின் வழிகாட்டுதலிலும், என்.டி.ஏ கூட்டணி இந்தத் தி.மு.க அரசை முற்றிலுமாகத் தூக்கியெறியும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

ஊழல் நிறைந்த, திறமையற்ற, சமரசம் செய்து கொண்டு, வளர்ச்சிக்கு எதிரான இந்தத் தி.மு.க அரசு, வரவிருக்கும் தேர்தலில் நிச்சயமாகத் தோல்வியடைய போகிறது.

எனது தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகள் அனைவரும் வாரிசு அரசியல், ஊழலைத் தவிர, தமிழ்நாட்டின் நலனுக்காகவோ அல்லது முன்னேற்றத்திற்காகவோ திமுக அரசு எதையும் செய்யவில்லை என்பதைப் புரிந்திருக்கிறார்கள்.

உள் கட்டமைப்புகள் சிதைந்து வருகின்றன. முறையற்ற நிர்வாகம், ஊழல் மற்றும் வளர்ச்சிக்கு எதிரான செயல்பாடுகளே தி.மு.க-வின் அடையாளமாக மாறியுள்ளன.

எடப்பாடி இல்லத்தில் பாஜக தலைவர்கள்
எடப்பாடி இல்லத்தில் பாஜக தலைவர்கள்

உதயநிதி ஸ்டாலினின் தேசவிரோத கருத்துக்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். உதயநிதி ஸ்டாலினின் வெறுப்புப் பேச்சுக்கு எதிராக உயர் நீதிமன்றமும் நேற்று கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. வெறுப்புப் பேச்சைத் தூண்டியதற்காகவும், மக்களிடையே பிரிவினையை உண்டாக்க முயன்றதற்காகவும் உதயநிதி ஸ்டாலினை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாளை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரவிருப்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. இதற்காக ஒரு பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமரையும், எடப்பாடி பழனிசாமியையும் அ.தி.மு.க தலைமையிலான வலுவான கூட்டணியின் பிற தலைவர்களையும் சந்திக்க தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மக்கள் ஆர்வத்துடன் வருகிறார்கள்.

வருகிற ஏப்ரல் மாதம் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வரும். அது தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும். வளர்ச்சியைத் தரும். உள்கட்டமைப்பை மேம்படுத்தும். நல்லாட்சியை வழங்கும்.

எடப்பாடி இல்லத்தில் பாஜக தலைவர்கள்
எடப்பாடி இல்லத்தில் பாஜக தலைவர்கள்

தமிழ்நாட்டின் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எனச் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் நாங்கள் பணியாற்றுவோம். இதன் மூலம் தமிழ்நாடு மீண்டும் நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய ஒரு உன்னதமான மாநிலமாக மாறும்.

தமிழ் கலாசாரத்தையும், தமிழ் பெருமையையும் நாங்கள் மீட்டெடுப்போம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *