உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை | Selva Perundagai talks on Udhayanidhi

1283448.jpg
Spread the love

சென்னை: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றால் அதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கும் என்று அதன் தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை முன்னிலையில் தமிழ் மாநில காங்கிரஸில் இருந்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் டி.வி.முருகன், மாநில பொதுச் செயலாளர் எம்.பழனிவேல் உள்பட 16 பேர் காங்கிரஸில் இன்று(திங்கள்) இணைந்தனர்.

இதையடுத்து செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”நீட் தேர்வு தாள் கசிந்தது தொடர்பான ஆதாரங்கள் தெரியவந்துள்ளன. இந்நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், நீட் தேர்வில் காங்கிரஸ் செய்த குளறுபடிகளை சரி செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். 2014-ல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக ஆட்சிக்கு வந்தபிறகுதான் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது. அதனால் கோயபல்ஸ் போல பாஜக தலைவர்கள் உண்மைக்குப் புறம்பாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுகுறித்து விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தலித் மக்களின் ஒரே தலைவராக அம்பேத்கார் இருந்தார். அவரைப் போன்ற தலைவர் இருந்தால்தான் தலித் மக்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வர முடியும். காங்கிரஸ் கட்சி மற்றும் ஆட்சியில்தான் தலித் மக்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர்களாக தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். ஆனால், திமுக, அதிமுக ஆட்சிக் காலத்தில் அதுபோல இல்லை. தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றால் அதை தமிழக காங்கிரஸ் வரவேற்கும். அவரை துணை முதல்வராக்குவது பற்றி ஆட்சி மற்றும் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். அதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராசா கருத்து சொல்லக்கூடாது. பாஜகவினருக்கு மதவாதம், வெறுப்பு அரசியலைத் தவிர வேறு எதுவும் தெரியாது.” இவ்வாறு செல்வ பெருந்தகை தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *